காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் தனது எம்பி பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
மோடி சமூகத்தினர் அனைவரையும் இழிவு படுத்தும் வகையில் ராகுல்காந்தி பேசியதாக இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார்.இந்த கிரிமினல் அவதூறு வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்தி, 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.
கடந்த வாரம் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த நிலையில், தீர்ப்பு அளிக்கும்போது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி எச்.எச்.வர்மா தெரிவித்திருந்தார். அதன்படி பலத்த பாதுகாப்புடன் ராகுல் காந்தி நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எச்எச் வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
மேலும், தண்டனை விவரம் இன்றே வெளியாகும் எனக் கூறியதால், நீதிமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி காத்திருந்தார். அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்ததால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி எச்.எச்.வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை விதித்து உத்தரவிட்டார். உடனடியாக பிணைக்கு ராகுல் காந்தி தரப்பு முறையிட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 30 நாட்களுக்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் என சூரத் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக மனுதாரர் பூர்னேஷ் மோடி தெரிவித்துள்ளார். ஐபிசி 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி குற்றவாளி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பூர்னேஷ் மோடியின் வழக்கறிஞர் கேதன் ரேஷம்வாலா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8 (3)ன் படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு ஆண்டுகளோ அதற்கு மேலோ தண்டனை பெற்றால் தனது பதவியை இழப்பார் என கூறுகிறது. இரண்டு ஆண்டு தண்டனைக்கு மேல் நீதிமன்றங்கள் தடை விதிக்காவிட்டால் சூரத் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மக்களவை செயலாளர், வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கலாம். அப்படி அறிவிக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம், வயநாடு தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தும். மேலும் சிறை தண்டனை காரணமாக ராகுல் காந்தி அடுத்து வரும் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
சூரத் மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் தண்டனை நிறுத்தி வைக்கவோ, ரத்து செய்யவோ மறுத்து விட்டால் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கிரிமினல் அவதூறு வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் 499 பிரிவில் இரண்டு ஆண்டு தண்டனை விதிப்பது மிகவும் அரிதான ஒன்று என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rahul Gandhi