பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முதல் நாள் தீர்ப்பு வந்த நிலையில் மேல்முறையீட்டிற்கு கூட கால அவகாசம் கொடுக்காமல் இரண்டாவது நாளே ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியது. இது ஜனநாயகப் படுகொலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, “நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவது குறித்து நான் இதற்கு முன்னர் பலமுறை பேசி இருக்கிறேன். அதற்கான உதாரணங்களை தினமும் பார்த்து வருகிறோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் உள்ள நட்பை பற்றி நான் கேள்வி கேட்டிருந்தேன்.
லண்டனில் நான் பேசியது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் தவறான தகவல்களை கொடுக்கிறார்கள். நான் கேள்வி கேட்பதை நிறுத்தப்போவதில்லை. தகுதி நீக்கத்தால் நான் அஞ்சப்போவதில்லை. அதானி விவகாரத்தை திசைதிருப்பவே என்மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து நான் கேள்வி எழுப்பி இருந்தேன். இன்று வரை அதற்கு பதில் வரவில்லை. நான் அடுத்து பேசப்போவதை நினைத்து பிரதமர் மோடி பயப்படுகிறார். பிரதமர் மோடியின் கண்ணில் நான் அச்சத்தை பார்த்தேன். நான் கைது செய்யப்பட்டாலும் உண்மையை தான் பேசுவேன். அதானி ஷெல் நிறுவனங்களுக்கு வந்த ரூ.20,000 கோடி பணம் யாருடையது என்பதை அவர்கள் விளக்க வேண்டும்” என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PM Narendra Modi, Rahul Gandhi