முகப்பு /செய்தி /இந்தியா / ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு? ஆம் ஆத்மிக்கு எதிராக குவியும் விமர்சனம்

ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு? ஆம் ஆத்மிக்கு எதிராக குவியும் விமர்சனம்

ராகுல் காந்தி - அரவிந்த் கெஜ்ரிவால்

ராகுல் காந்தி - அரவிந்த் கெஜ்ரிவால்

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சூழலில், தகுதி நீக்கம் என்பது மோடி பயந்து விட்டதை காட்டுவதாக கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு பேசிய ராகுல் காந்தி, ‘எப்படி எல்லா திருடர்களும் தங்களது பெயருக்கு பின்னால் மோடி என்கிற துணை பெயரை வைத்திருக்கிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் ராகுல் காந்தி எம்.பி. பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2013-ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸின் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினருக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர் 3 மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்தால் அவர் பதவியில் தொடரலாம் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(4) கூறியது. இதனை லில்லி தாமஸ் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இந்த பிரிவை நீக்கியது. உச்ச நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக அப்போதைய மன்மோகன் சிங் அரசு அவரச சட்டத்தை கொண்டுவந்தபோது, இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும், தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி.க்கள் உடனடியாக தகுதி நீக்க செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

தற்போது ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சூழலில், தகுதி நீக்கம் என்பது மோடி பயந்து விட்டதை காட்டுவதாக கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில்  கெஜ்ரிவால் தகுதி நீக்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தண்டனைக் காலம் 2 ஆண்டுகள் கழித்து மேலும் 6 ஆண்டுகளுக்கு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பார். ஒட்டுமொத்தமாக 8 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். மேல் முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டால் 2024 மற்றும் 2029 தேர்தல்களில் அவரால் போட்டியிட முடியாது. 2034 பொதுத் தேர்தலில்தான் அவரால் போட்டியிட வாய்ப்புள்ளது. தற்போது ராகுலுக்கு 52 வயதாகும் நிலையில் அவர் 63 வயதில்தான் அடுத்து நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

top videos
    First published:

    Tags: Aam Aadmi Party, Congress, Rahul Gandhi