முகப்பு /செய்தி /இந்தியா / மன்மோகன் சிங் ஆட்சியில் ராகுல் காந்தி தடுத்த அவசரச் சட்டம்... அவரோட பதவி நீக்கத்தோடு தொடர்பாவது ஏன்?

மன்மோகன் சிங் ஆட்சியில் ராகுல் காந்தி தடுத்த அவசரச் சட்டம்... அவரோட பதவி நீக்கத்தோடு தொடர்பாவது ஏன்?

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு கால அவகாசம் வழங்கும் வகையிலான அவரசச் சட்டத்தை ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்ற மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தச் சட்டத்தை அன்று ராகுல் காந்தி வர விடாமல் தடுத்தார். ஆனால், இன்று அவரது எம்.பி பதவி பறி போவதற்கு அதுவே காரணமாக அமைந்துள்ளது.

குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக தண்டனை பெறும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கத்திற்கு மூன்று மாத கால அவகாசம் அளிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவை உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை செல்லாத தாக்கும் வகையில், அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அவசர சட்டத்தை கொண்டு வந்தது.

அதன்படி, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்யவும், அது வரையில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் பதவியில் தொடரவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது.

தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்தை பாதுகாக்கும் நோக்கில், இந்த அவசரச் சட்டம் அப்போது கொண்டு வரப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி இந்த அவசரச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ராகுல் காந்தியும் எதிர்ப்பு தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின்போது அவசரச் சட்டத்தின் நகல்களை ராகுல் காந்தி கிழித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தியின் தீவிர எதிர்ப்பு காரணமாக, அவசரச் சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திரும்பப் பெற்றது. தற்போது அதே மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதியின் கீழ் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அப்போது ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால், அந்த அவசரச் சட்டம் மூலம் தற்போது அவருக்கு கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் கிடைத்திருக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Rahul Gandhi