பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில், பாபா கோயில் ஒன்றில் பக்தர்களுக்கு மதுபானம் பிரசாதமாக வழங்கப்பட்டதை அடுத்து அங்கு மதுபானம் வாங்குவதற்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் - பதேகர் சாலையில் உள்ள போமா கிராமத்தில், பாபா ரோட்ஷாவின் (Baba Rode Shah) கோயில் உள்ளது. பாபா அடக்கம் செய்யப்பட்டுள்ள இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். நேற்று (மார்ச் 23) நடைபெற்ற விழாவில் திரளான பக்தர்கள் இக்கோயிலில் வழிபட்டனர். அப்போது, பாட்டில் பாட்டிலாக திறந்து பக்தர்களுக்கு மதுபானம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனையொட்டி ஏற்பட்ட கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்தியாவின் விநோத வழிபாட்டு முறைகள் கொண்ட வழிபாட்டு தலங்களில் பஞ்சாப் மாநிலத்தின் இந்த பாபா ரோட்ஷா கோவிலும் ஒன்றாகும். கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோவிலில் இந்த வழிபாட்டு முறை தொடர்ந்து வருவது சிறப்புக்குரியதாகும்.
மேலும் படிக்க : ஊட்டியில் மயில்களை பார்த்து இருக்கீங்களா? ஆச்சரியத்தில் உள்ளூர் மக்கள்!
கோவிலில் மதுபான பிரசாதம் வழங்கப்படும் வரலாறு:
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் தவான் கிராமத்தைச் சேர்ந்த பாபாவின் குடும்பத்தினர் 1896ம் ஆண்டு தற்போது கோவில் கட்டப்பட்டுள்ள போமா கிராமத்தில் குடியேறியுள்ளனர். பின்னாட்களில் இவர் சன்னியாசியாக மாறிய பின்னர் அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பாபாவை அணுகி தனக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் குழந்தை வரம் கிடைக்கவில்லை என மனமுருகி வேண்டியுள்ளார். பின்னர் அந்த விவசாயிக்கு குழந்தை பிறக்கவே, அவர் மகிழ்ச்சியில் பாபாவை நாடி வந்து பணத்தை அவருக்கு காணிக்கையாக தந்திருக்கிறார்.
விவசாயி கொடுத்த அந்த பணத்தை ஏற்க மறுத்த பாபா, இந்த பணத்தில் மதுபாட்டில் வாங்கி அதனை பிரசாதமாக தனது பக்தர்களுக்கு வழங்குமாறு தெரிவித்திருக்கிறார். பின்னர் பாபா 1924ம் ஆண்டில் காலமாகிவிட அவரின் நினைவாக அவரின் பக்தர்களுக்கு மது வழங்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க : விவசாயிகளின் புதுமையான விவசாய முறை..! அதிக உற்பத்தி மற்றும் அதிக லாபம்..
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 2 நாட்களுக்கு பாபா ரோட்ஷா கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். இந்நிகழ்வில் மதுபான பிரசாதத்தை ஆண்களும், பெண்களும் முண்டியடித்துக் கொண்டு பெற்று செல்கின்றனர்.
கொரோனா காலகட்டத்தில் இந்த கோவிலில் மதுபான பிரசாதத்தை வாங்க கூட்டம் குவிந்த நிலையில் அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Punjab