சமீப காலங்களில் ஆன்லைன் மூலம் வேலை தருவதாக கூறி பல்வேறு மோசடிகள் நாடு முழுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்தும், வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களை அதிகம் குறி வைத்து இந்த மோசடியானது நிகழ்த்தப்படுகிறது.
குறிப்பாக புனே மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் அதிக அளவில் ஆன்லைன் முறையில் வேலை தருவதாக கூறி மோசடிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஏமாற்றப்பட்டதாக பலரும் அதிக அளவில் புகார்களை அளித்த வண்ணம் உள்ளனர்.
ஆன்லைன் மோசடிக்காரர்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களின் மூலமும் வேறு பல தொடர்பு கொள்ளும் தளங்களின் வழியாகவும் தங்கள் வலையில் விழுவதற்கு ஏற்றவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வேலை தருவதாக ஆசை காட்டி லட்சங்கள் முதல் கோடிகள் வரை மோசடி செய்து வருகின்றனர். அந்த வகையில் கிட்டத்தட்ட ஒரு கோடி வரை ஆன்லைன் மோசடிக்காரர்கள் மூலம் ஒருவர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்.
56 வயது உடைய மதிக்கத்தக்க ஒருவர் ரூபாய் 96.57 லட்சத்தை ஆன்லைன் மோசடிக்காரர்களிடம் இழந்துள்ளார். இவர் விளம்பர படங்கள் தயாரிக்கும் வேலையை செய்து வருகிறார். ராம்போ காலனியில் வசிக்கும் இவருடைய மொபைல் போனிற்கு பகுதி நேர வேலை ஒன்று இருப்பதாக கூறி செய்தி வந்துள்ளது. அந்த செய்தியை பார்த்த அவர் உடனடியாக செய்தியில் உள்ளவரை தொடர்பு கொண்ட போது சாட்டிங் செயலி ஒன்றில் உள்ள குழுவில் இணையுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
பிறகு இவருக்கு வேலை தருமாறு உறுதியளித்தவர்கள் முதலில் அந்த மனிதரின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். பிறகு அவருக்கு “வெல்கம் போனஸ்” எண்டு கூறி பத்தாயிரத்தை அளித்துள்ளனர். மேலும் வரும் காலங்களில் இதைவிட அதிகம் லாபம் பார்க்க முடியும் என்றும் ஆசையை தூண்டியுள்ளனர்.
அதன் பிறகு மற்றும் சில வேலைகளை அவரிடம் அளித்து அதில் முதலீடு செய்யும் பட்சத்தில் இன்னும் அதிக பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இவர்களின் வார்த்தையை நம்பிய அவரும் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்வதற்கு முன்பாகவே பல லட்சம் ரூபாய்களை அவர்களுக்கு அளித்துள்ளார்.
அதாவது இவருக்கு வேலையை அளிக்கும் முன்பு அந்த வேலையை பெற வேண்டுமெனில் ரூபாய் 21,990-ஐ இரண்டு தவணைகளாக செலுத்தினால் மட்டுமே அந்த பகுதி நேர வேலையை பெற முடியும் என கூறியுள்ளனர். டிராவல் ஏஜென்சி ரேட்டிங் மற்றும் விமர்சனம் செய்யும் வேலை என்று அவர்கள் கூறியுள்ளனர். அவர் பணத்தை அளித்ததும் இவர்கள் ரூபாய் 24,890 அவருக்கு திருப்பி கொடுத்துள்ளனர்.
இதனால் இவர்கள் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இவர்கள் மீண்டும் ரூபாய் 80,000 செலுத்துமாறு கூற, இவரும் பணத்தை அவர்களுக்கு செலுத்தியுள்ளார். எட்டு விமர்சனங்கள் மற்றும் இவரின் கமிஷன் தொகை உட்பட ரூபாய் 94,840 இவர்கள் அவருக்கு மீண்டும் திருப்பி கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு மீண்டும் சில நாட்கள் கழித்து அந்த மனிதரிடம் ரூபாய் 1 லட்சம் கேட்க, அவரும் எந்தவித சந்தேகமும் இன்றி அவர்களுக்கு பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த முறை அவருக்கு கமிஷன் தொகை உட்பட எந்தவித பணமும் திருப்பி செலுத்தப்படவில்லை. மேலும் இந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டுமானால் அவர் 35.25 லட்ச ரூபாயை செலுத்தினால் ஒட்டுமொத்தமாக லாபத்துடன் அவர்கள் மீண்டும் இவருக்கு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
அதையும் செய்து முடித்த அவர் பணத்தைத் திரும்ப கேட்டதற்கு, அந்த மோசடி கும்பல் மேலும் சில லட்சம் ரூபாய்களை முதலீடு செய்யுமாறு கூறியுள்ளது. இந்த முறை 61.32 லட்சம் ரூபாயை அவர் மோசடி கும்பலுக்கு அளித்துள்ளார். இதன் பிறகு தான் அவர்கள் தன்னை ஏமாற்றியுள்ளனர் என்பதையும் தன் பணம் தனக்கு திரும்ப கிடைக்காது என்பதையும் அவர் உணர்ந்துள்ளார்.
கிடைத்த அறிக்கையின் படி, மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட அந்த நபர் ஒட்டுமொத்தமாக 58 முறை வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றத்தை செய்துள்ளார். மேலும் அவர் அளித்த புகாரின் படி சைபர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையானது பதிவு செய்யப்பட்டுள்ளது.
419, 420 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் காவல்துறையினர் அந்த குறிப்பிட்ட மெசஞ்சர் அப்ளிகேஷன் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு மோசடிக்காரர்கள் ஒட்டுமொத்த தகவலையும் தங்களுக்கு அளிக்குமாறு கூறியுள்ளது. மேலும் குறிப்பிட்ட வங்கியைத் தொடர்பு கொண்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான அனைத்து தகவல்களையும் அளிக்குமாறு கூறியுள்ளது. மோசடிக்காரர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Cyber crime, Online crime