பீகார் அரசின் சாதி வாரி மக்கள் கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக 1881ல் சாதி வாரிக் கணக்கெடுப்பு தொடங்கியது. 1931 வரை இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1941ல் இரண்டாம் உலகப் போர் காரணமாக நிறுத்தப்பட்டது. 1951க்குப் பிறகு இந்தியாவில் சாதி வாரிக் கணக்கெடுப்பை முற்றிலும் கைவிடப்பட்டது. இதுநாள் வரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் 1931 மக்கள் தொகை அடிப்படையிலே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அனைத்து மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும், மத்திய அரசுப் பணிகளுக்கான நியமனத்திலும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த முற்பட்ட பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. முற்பட்ட வகுப்பினருக்கான இந்த 10% இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும் என்றும், மக்கள் தொகைக்கு இணையாக வழங்க வேண்டும் என்றும் வடஇந்தியாவில் குறிப்பாக பீகார், உத்தர பிரதேச மாநிலங்களில் கோரிக்கை எழுந்தது.
அதேபோன்று, தற்போது ஓபிசி பட்டியலில் உள்ள ஒரு சில சமுதாயத்தினர் மட்டுமே, மத்திய அரசுப் பணிகள் மற்றும் மத்திய கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு பயன்களை அனுபவித்து வருவதாகவும், பெரும்பாலான சமுதாயத்தினர் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கோரிக்கை எழுந்தது. எனவே, வட இந்தியாவில் சாதி வாரிக் கணக்கெடுப்புக்கான ஆதரவு அனைத்து சமூக நிலை மக்களிடத்திலும் இருந்து எழுந்தது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள் தீட்ட இந்த கணக்கெடுப்பு முக்கியம் என்றும் மத்திய அரசு உடனடியாக தேசிய அளவில் சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சட்டப் பேரவையில், அனைத்துக் கட்சி ஆதரவுடன் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியது. தீர்மானத்தின் மீது மத்திய அரசு முடிவு எடுக்காத நிலையில், மாநில அளவில் சாதி வாரி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்த அந்த அரசு முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் சாதி வாரிக் கணக்கெடுக்கும் பணியை பீகார் அரசு தொடங்கியது.
இந்நிலையில், இந்த கணக்கெடுப்பு பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரி பாட்னா உயர்நீதிமன்றத்தில் அகிலேஷ் குமார் மற்றும் பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாதி வாரிக் கணக்கெடுப்பு பணிகளை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த பணிகள் அனைத்தும் மத்திய அரசின் வரையறைக்குள் வரும் என்றும் வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தவே கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: இடஒதுக்கீடு அளவை 75% ஆக அதிகரிப்போம்... காங்கிரஸ் முக்கிய வாக்குறுதி...!
இந்த வழக்கில் நேற்று வாதங்கள் முடிந்த நிலையில், சாதி வாரிக் கணக்கெடுப்பு பணிக்கு இடைக்கால தடை விதித்து தலைமை நீதிபதி கே.வி.சந்திரன் உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜுலை 3 தேதி நடைபெறவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: OBC Reservation