தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 1927- ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டத்தின் பாதுகாப்பு குறைபாடு, இடவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற நிகழ்வுகளை நடத்த புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தது.
இதன் தொடரச்சியாக புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்துக்கு பிரதமர் மோடி 2020, டிசம்பர் 10-ம் தேதி அடிக்கல் நாட்டினார். 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடிகொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக `சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் சுமார் 888 பேர் வரையும் , மாநிலங்களவையில் 300-க்கும் அதிகமான பேர் அமரும் வகையிலும், இரு அவைகளும் பங்கேற்கும் கூட்டு கூட்டத்தின்போது 1,280 உறுப்பினர்கள் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி, வரும் 28-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க கூடாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு : அகில இந்திய அளவில் முதல் 3 இடத்தைப் பிடித்து பெண்கள் சாதனை
மேலும், திறப்பு விழா தேதியான மே 28-ம் தேதி, சாவர்க்கரின் பிறந்தநாள். அந்தத் தேதியை தேர்ந்தெடுத்ததற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
நாட்டின் தலைவர் என்ற முறையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் டி.ராஜா, வலியுறுத்தியுள்ளார். சுயகவுரவம், கேமிரா ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், பிரதமர் மோடி நாகரிகத்தையும், விதிமுறைகளையும் புறம் தள்ளுவதாகவும் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
மக்கள் பணத்தை கொண்டு கட்டப்பட்ட கட்டடத்தை பிரதமர் மோடி, தனது சொந்த பணத்தில் கட்டியது போல் நடந்துக்கொள்வதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கான அழைப்பதிழை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு எம்பி ரவிக்குமார், இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரின் பெயர்கூட அழைப்பில் இல்லை. அவரை இப்படி அவமதிப்பது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, அடுத்த சந்ததியினருக்கான மதிப்புமிக்க சொத்தான படைப்பை கொண்டாடுவதில் எதிர்க்கட்சிகள் ஏன் விலகி நிற்கின்றன என வினவியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.