ரயில்வே அமைச்சரை பதவி விலகுமாறு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அறிவுறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்குப் பிறகும் யாரும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவித்தார். இதுபோன்ற வலி நிறைந்த விபத்துக்களுக்கு பொறுப்பேற்பதிலிருந்து மோடி அரசு விலகிவிட முடியாது என்று அவர் கூறினார்.
இதேபோல, ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காலிப் பணியிடங்களை மோடி அரசு நிரப்பாததால், ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ரயில்வே துறையில் 3 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும், மிகப்பெரும் அதிகாரி பணியிடங்களும் கூட, 9 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை என்றும் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குவங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ரயில் விபத்து விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்று வலியுறுத்தினார். விபத்து தடுப்பு கருவி குறித்து ஒடிசாவில் தான் பேசியபோது, உடனிருந்த ரயில்வே அமைச்சர் எதுவும் பேசாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேற்குவங்கத்தைச் சேர்ந்த 61 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 182 பேரை காணவில்லை என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இந்நிலையில், ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளித்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், பொறுப்பேற்பதிலிருந்து தாங்கள் ஓடிவிடவில்லை என்று கூறினார்.
மேலும் படிக்க... ஒடிசா ரயில் விபத்து: தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம்!
தங்களது அமைச்சர்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து தங்களது பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவின் பெயருக்கு ராகுல் காந்தி களங்கம் ஏற்படுத்தி வருவதாகவும் அனுராக் தாக்கூர் விமர்சித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Congress, Rahul Gandhi, Train Accident