முகப்பு /செய்தி /இந்தியா / புதிய நாடாளுமன்ற திறப்பு விழா இரண்டு பகுதிகளாக நடைபெறும் - மக்களவை செயலகம் தகவல்!

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா இரண்டு பகுதிகளாக நடைபெறும் - மக்களவை செயலகம் தகவல்!

புதிய நாடாளுமன்றம்

புதிய நாடாளுமன்றம்

புதிய நாடாளுமன்றக் கட்டடம் குறித்து பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களின் உணர்வுப்பூர்வமான கருத்துக்கள், புதிய நாடாளுமன்றம் மீதான விருப்பத்தை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா இரண்டு பகுதிகளாக நடைபெறும் என மக்களவை செயலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நாளை புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் திறந்து வைக்கின்றனர். இந்நிலையில், இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்வுகள் நடைபெறும் என மக்களவை செயலகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி விழாவின் முதல் பகுதியாக, காலை 7 மணி முதல் 9 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகே மத சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வரவழைக்கப்பட்ட 40 மத குருக்கள் பங்கேற்கவுள்ளனர்.

அதன்பிறகு பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கப்படவுள்ளது. இதற்காக, தமிழ்நாட்டில் இருந்து 21 ஆதீனங்கள் இன்று புதுடெல்லி புறப்பட்டனர்.

பின்னர், காலை 11.30 மணிக்கு மேல் மக்களவை அறையில் தேசிய கீதத்துடன் இரண்டாம் கட்ட திறப்பு விழா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, மதியம் ஒரு மணிக்கு 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுவார் என கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க உரையை மக்களவை சபாநாயகரும், இறுதி உரையை பிரதமரும் நிகழ்த்தவுள்ளனர். இதில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிய நாடாளுமன்றக் கட்டடம் குறித்து பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மக்களின் உணர்வுப்பூர்வமான கருத்துக்கள், புதிய நாடாளுமன்றம் மீதான விருப்பத்தை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தீவிரமாக பணியாற்ற தங்களை ஊக்குவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தவும், கோடிக்கணக்கான மக்களை மேம்படுத்தவும் இந்த ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றம் முயற்சி மேற்கொள்ளும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Narendra Modi, Parliament