தலைநகர் டெல்லியில் இருந்து பான் இந்தியா அளவில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை என்.சி.பி எனப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கூண்டோடு பிடித்துள்ளது. அந்த போதைப்பொருள் கும்பலிடம் இருந்து 15 ஆயிரம் ப்ளாட்களை பறிமுதல் செய்தது என்.சி.பி. இதன்மூலம், கடந்த 20 ஆண்டுகளில் என்.சி.பி. பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் அளவில் 15 ஆயிரம் ப்ளாட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை அதிகாரிகளின் விசாரணைப்படி, ‘போதைப்பொருள் கும்பலை சேர்ந்த கூட்டாளி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் போதைப்பொருள் வேண்டுமா என கேட்பார். யாரேனும் விருப்பம் தெரிவித்தால், அந்த உரையாடல் தனிப்பட்ட மெசேஜிங் செயலியான 'Wicker Me' என்ற செயலிக்கு மாறும்’. மேலும், கிரிப்டோகரன்சி மூலம் பணம் செலுத்தப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, பெரும்பாலும் எல்.எஸ்.டி எனப்படும் லைசர்ஜிக் அமிலம், டைதிலாமைடு மருந்து நெதர்லாந்து அல்லது போலந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது விசாரணையில் அம்பலமானது.
இந்த வழக்கில் நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மாணவர்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டு வந்த நபர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, டார்க்நெட்டில் விளம்பரம் செய்வதோடு, போதைக்கு அடிமையானவர்கள் என்று கருதும் நபர்களை இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி அந்த கும்பல் குறிவைத்ததை போலீசார் கண்டறிந்தனர்.
டார்க்நெட் என்பது ரகசிய இணையதளமாகும். போதைப்பொருள் விற்பனை, ஆபாச வீடியோக்கள் பரிமாற்றம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக சட்டத்தின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க ToR எனப்படும் ரகசிய ரவுட்டரை பயன்படுத்தும் இணையதளம் ஆகும்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்பதும், அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க தனிப்பட்ட மெசேஜிங் செயலியையும் ரகசிய வலைத்தளங்களைப் பயன்படுத்தியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
என்.சி.பி அதிகாரி ஒருவர் கூறுகையில், 0.1 கிராம் எல்எஸ்டியை வைத்திருந்தால் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர். ஆனால், 15 ஆயிரம் எல்.எஸ்.டி ப்ளாட்கள் கைப்பற்றப்படுவது வணிக அளவை விட 2,500 மடங்கு அதிகம் என்று கூறினார். என்.சி.பி கைப்பற்றிய எல்எஸ்டியின் மதிப்பு ரூ. 10.50 கோடி என்று துறை சார்ந்த அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Delhi