மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் தனது இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தனது 7 வயது மகனைக் கொன்றதாக அம்மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று நடந்ததாகவும் குற்றவாளி தலைமறைவாக உள்ளதால் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தூர் மாவட்டத்தில் தேஜாஜி நகர் (Tejaji Nagar) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லிம்போடி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த சிறுவன் பிரதீக் முண்டே என்பது போலீசாரால் அடையாளம் காணப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் 26 வயதான ஷஷிபால் முண்டே என்பதும் அடையாளம் காணப்பட்டு, அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பிரதீக்கின் உறவினர் ராஜேஷ் முண்டே கூறுகையில், ‘எனது தம்பி மகன் பிரதீக் முண்டேவின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், பிரதீக்கின் தந்தையும் எனது தம்பியுமான ஷஷிபால் முண்டே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு பிரதீக் தொடர்பாக ஷஷிபாலுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது’ என அவர் கூறினார்.
மேலும், நேற்று காலை பிரதீக்கை தனது தாய் மயங்கிய நிலையில் கண்டுள்ளார் எனவும், அதன் பிறகு தங்களுக்கு தகவல் கொடுத்ததும் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறினார். ஆனால், அங்கு பிரதீக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பிரதீக் இறப்பில் தனது சகோதரர் ஷஷிபாலுக்கு நிச்சயம் தொடர்பு இருப்பதாகவும் ராஜேஷ் முண்டே குற்றம் சாட்டியிருந்தார். மறுபுறம், காவல் ஆய்வாளர் என்.எஸ்.தன்வார் கூறும்போது, முதற்கட்ட விசாரணையில், பிரதீக் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஷஷிபாலின் உறவினர்கள் கூறும்போது, பிரதீக் தனது தந்தையால் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
உறவினர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட ஷஷிபால் முண்டேவை கைது செய்ய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்டவரைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு தேஜாஜி நகர் போலீஸார் அப்பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Madhya pradesh