முகப்பு /செய்தி /இந்தியா / ஆக்ரோஷ சிங்கம்... சாவர்க்கர் பிறந்த நாளில் திறப்பு விழா- புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றும் சர்ச்சைகள்

ஆக்ரோஷ சிங்கம்... சாவர்க்கர் பிறந்த நாளில் திறப்பு விழா- புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றும் சர்ச்சைகள்

புதிய நாடாளுமன்றம்

புதிய நாடாளுமன்றம்

சாவர்க்கரின் 140 வது பிறந்த தினம் என்பதாலேயே மத்திய அரசு இந்த தேதியை தேர்வு செய்துள்ளதாகவும் உண்மையிலேயே அங்கு அனைத்து பணிகளும் முழுமையாக முடியவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா பெரும் சர்ச்சையாகி கொண்டிருக்கும் நிலையில், அக்கட்டடம் தொடர்பாக மற்ற சர்ச்சைகள் என்னவென்று இந்த தொகுப்பில் காணலாம்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா, 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. அப்போது கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தது. கொரோனா காலத்தில் பணியில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் கட்டுமான பணிகளை அத்தியாவசிய சேவைகளின் கீழ் கொண்டு வந்த மத்திய அரசு பணிகளை தொடர்ந்தது. கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணி எனக் கூறிய நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. கொரானா பரவல் உச்சத்தில் இருந்த போது, தடுப்பூசிகளுக்கும் மருத்துவ தேவைகளுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்காமல் 1,000 கோடி ரூபாயை கட்டடத்திற்கு செலவிடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல் பகுதியில் 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில், வெண்கலத்தில் சிங்க சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை பிரதமர் மோடி, கடந்த ஜூலை மாதம் திறந்து வைத்தார்.

சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தேசியச் சின்னத்தில் சிங்கங்கள் அமைதியுடன் காட்சியளிப்பதாகவும் . ஆனால், பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ள தேசியச் சின்னத்தில் சிங்கங்கள் மூர்க்கத்தனமாகவும், ஆக்ரோஷத்துடனும் காணப்படுவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட அதிகப்படியான மரங்கள் வெட்டப்படுவதாக டெல்லி மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து, 487 மரங்கள் வேறு இடத்தில் நடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அந்த வளாகத்தில் இருந்த மேலும் 320 மரங்கள் வெட்டப்படாது என அரசு கூறியது. எனினும் ஒட்டு மொத்தமாக 2,466 மரங்கள் வெட்டப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கணக்கு காட்டியது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பெயர் குறித்த சர்ச்சைகளும் எழுந்தன. மத்திய அரசு, இது வரை எந்த பெயரையும் அறிவிக்காத நிலையில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரை வைக்க வேண்டும் என்று டெல்லி மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. அகில இந்திய க்ஷத்திரிய மகாசபையோ, டெல்லியை ஆண்ட கடைசி இந்து மன்னரான பிருத்வி ராஜ் சவுகான் பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்தியது.

புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் குறித்தும் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். செங்கோலில் மேற்பகுதியில் உள்ள நந்தி மதத்தை குறிப்பதால் அதனை எதிர்ப்பதாக கூறுகின்றனர். இந்தியா மதசார்பற்ற நாடு எனவும், இந்து மத சின்னமாக நந்தி கருதப்படுவதாகவும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கசெங்கோல் ஆட்சி மாற்றக் குறியீடாக நேருவுக்கு வழங்கப்பட்டதா? வரலாற்று ஆவணங்கள் சொல்வது என்ன?

top videos

    புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா தேதியும் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சாவர்க்கரின் 140 வது பிறந்த தினம் என்பதாலேயே மத்திய அரசு இந்த தேதியை தேர்வு செய்துள்ளதாகவும் உண்மையிலேயே அங்கு அனைத்து பணிகளும் முழுமையாக முடியவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

    First published:

    Tags: Parliament, PM Modi