கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் 136 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 63 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்துவருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்துவருகிறது.
பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய முகமாக ராகுல் காந்தி அறியப்பட்டாலும், கர்நாடகா மாநில அளவில் டி.கே.சிவகுமார், சித்தராமையா ஆகிய இருவரை முன்னிறுத்திதான் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது.
சித்தராமையாவை விட டி.கே.சிவகுமார் மிகத் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். பெரும்பான்மையான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று கூறிய நிலையிலும், காங்கிரஸ் 140 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறும் என்று சிவகுமார் தெரிவித்துவந்தார்.
இந்தநிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே சிவகுமார் முன்னிலையிலேயே இருந்துவந்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜக வேட்பாளர்களை விட மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் நீடித்துவந்தார். வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் டி.கே.சிவகுமார், 1,21,595 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மகாத்மா காந்தியைப் போல மக்கள் மனதில் இடம்பிடித்தீர்கள்- ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து
இது வரலாறு காணாத வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின்போது 79,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். சிவகுமாரை எதிர்த்து போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். கர்நாடகா முதல்வர் வேட்பாளர் போட்டியிலும் சிவகுமார் முன்னிலையில் உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka Election 2023