கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ள நிலையில், இன்னும் சில சுற்றுகள் வாக்கு எண்ணும் பணி தொடர உள்ளது. வெற்றிக்கு தேவையான 113 இடங்கள் என்ற மேஜிக் எண்ணிக்கையை தாண்டி 136 என்ற பெரும் எண்ணிக்கையை அடைந்து அக்கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி அடைந்துள்ள இந்த நிலையில், அக்கட்சியின் தலைவர்கள், அணியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர். அதே சமயம் காங்கிரஸ் வெற்றி முகம் தெரிந்தவுடன் அக்கட்சி சார்பில் யார் முதல்வர் என்ற விவாதமும் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களைப் போல் அல்லாமல், கர்நாடகாவில் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அரசியல் சூழலை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் களத்தில் இணைந்து செயல்பட்டனர்.
அவற்றில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய இரண்டு முகங்கள் -- கர்நாடகா காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் மற்றொருவர் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா. இப்போது இவர்கள் இருவரும்தான் முதல்வர் ரேஸில் உள்ளனர். இவர்களில் யார் முதல்வராக வருவார் என்பதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
மீண்டும் முதல்வராக பதவியேற்பதில் சித்தராமையா தரப்பினர் மெத்தனமாக செயல்பட்டால், டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸை தலைமையேற்று நடத்த வாய்ப்பு அளிக்கப்படும் என சிலர் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், காங்கிரஸ் தலைமையே இது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளது என்ற வாதமும் எழுந்துள்ளது. மூத்த தலைவராக உள்ள சித்தராமையா முதல்வராக தொடரலாம் என்றும், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப் பின், சிவகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. ஆக, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையிலும், அக்கட்சி சார்பில் யார் முதல்வராக பதவியேற்பார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.