224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டமன்றத்துக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே 10ம் தேதியன்ரு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி 78 தொகுதிகளிலும், காங்கிரஸ் 111 தொகுதிகளிலும், குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, இது தவிர சிறிய கட்சிகள் இரண்டு இடங்களிலும், சுயேட்சைகள் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். தொங்கு சட்டமன்றம் அமையும் வாய்ப்பு ஏற்படுமெனில் அங்கு சுயேட்சைகளின் ஆதரவை பெறுவதற்கு பாஜகவும், காங்கிரஸும் முயற்சிகளை மேற்கொள்ளும்.
மேலும் படிக்க : ரிசார்ட்.. ஹெலிகாப்டர் ரெடி... காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்...!
இந்நிலையில் அந்த 3 சுயேட்சைகள் யார் யார்? அவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டு முன்னிலை பெற்றுள்ளனர் என்பது குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்..
1. அஃசல்பூர் (கலபுர்கி மாவட்டம்) - சகோதரருடன் மல்லுக்கட்டும் சுயேட்சை
அஃசல்பூர் தொகுதியில் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை ஓரம்கட்டியுள்ளார் சுயேட்சையாக போட்டியிட்டுள்ள நிதின் வெங்கையா குத்தேதர். பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ள இவருக்கு வயது 40. தேர்தல் ஆணைய தகவலின்படி இவருடைய சொத்து மதிப்பு 33.7 கோடி ரூபாயாக உள்ளது.
அஃசல்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான மல்லிகையா குத்தேதர், சுயேட்சை வேட்பாளரான நிதின் வெங்கையா குத்தேதரின் சொந்த சகோதரர் ஆவார். இந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் எம்.ஒய்.பட்டீல். இந்த தொகுதியில் கட்சி செல்வாக்கைவிடவும் தனி நபரின் செல்வாக்கே பிரதானமாக திகழ்கிறது..
கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023 நேரலை...
தற்போது பாஜக சார்பாக போட்டியிடும் மல்லிகையா குத்தேதர் 6 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர் ஆவார். இதில் 4 முறை காங்கிரஸ் சார்பாகவும், ஒரு முறை எடியூரப்பாவின் கர்நாடகா காங்கிரஸ் கட்சி சார்பாகவும், ஒரு முறை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளரும் சிட்டிங் எம்.எல்.ஏவுமான எம்.ஒய்.பட்டீல் இதே தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார். பாஜக இதுவரை வெல்லாத தொகுதி இதுவாக உள்ளது. இந்த முறை அஃசல்பூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் நிதின் வெங்கையா குத்தேதர் முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 2ம் இடத்திலும், பாஜக வேட்பாளர் 3ம் இடத்திலும் உள்ளனர்.
2. கவுரிபிதானூர் (சிக்கபல்லபூர் மாவட்டம்) - முந்தும் சமூக சேவகர்
கடந்த 3 முறையாக காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ள இந்த தொகுதியில் தற்போது முன்னிலை வகிப்பவர் புட்டசுவாமி கவுடா. (வயது 69) கடந்த சில ஆண்டுகளாக தனது KHP அறக்கட்டளை சார்பாக இந்த தொகுதிகளில் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு கவுரிபிதானூர் தொகுதி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.
தற்போது கவுரிபிதானூர் தொகுதியில் இவர் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சிவசங்கர ரெட்டியும், 3ம் இடத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் நரசிம்ம மூர்த்தியும் உள்ளனர்.
3. ஹரப்பனஹள்ளி (விஜயநகரா மாவட்டம்) - முன்னாள் துணை முதல்வரின் மகள்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் மறைந்த எம்.பி பிரகாஷின் மகள் எம்.பி.லதா மல்லிகார்ஜூனுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். தற்போது ஹரப்பனஹள்ளி தொகுதியில் எம்.பி.லதா மல்லிகார்ஜூன் முன்னிலை வகிக்கிறார்.
தற்போதைய நிலவரப்படி இந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் ஜி.கருணாகர ரெட்டி 2ம் இடத்திலும், காங்கிரஸ் கட்சியின் கொட்ரேஷி 3ம் இடத்திலும் உள்ளனர்.
ரெய்பேக் (பெல்காம் மாவட்டம்) தொகுதியில் முந்தும் தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி:
தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் கணவரும், தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுச் சென்ற ஷம்பு கல்லோலிகர் பெல்காமின் ரெய்பேக் தொகுதியில் தற்போது 32% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சி போட்டியிட சீட் மறுத்த நிலையில் சுயேட்சையாக களமிறங்கினார்.
பாஜக வேட்பாளர் தோல் துர்யோதன் மகாலிங்கப்பா இந்த தொகுதியில் 39% வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka, Karnataka Election 2023