கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு புதன் கிழமை நடைபெற்றது. இதில் முன் எப்போதும் இல்லாத வகையில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகள் 36 மையங்களில் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கணிசமான இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அரசியல் கட்சிகளை தவிர, 918 சுயேச்சைகளும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 224 இடங்களுக்கு மொத்தமாக 2613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியிலும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மஜத தலைவர் குமாரசாமி சென்னபட்ணா தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு மண்டல மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டன. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், 24 மணி நேரமும் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்..
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் இரண்டு கட்டங்களாக பயிற்சி அளித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 16-வது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது மாலைக்குள் தெரிந்துவிடும்.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நியூஸ் 18 தொலைக்காட்சியில் இன்று காலை 7 மணி முதல் நேரலை செய்யப்படுகிறது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்தும் நமது செய்தியாளர்கள் குழு முன்னிலை நிலவரங்களை உடனுக்குடன் துல்லியமாக வழங்க உள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று பெரும்பான்மையான நிறுவனங்கள் கூறியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka, Karnataka Election 2023, Politics, Tamil News