முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகா தேர்தல் : ஆப்ரேசன் ‘கை’யை கையில் எடுக்கிறாரா டி.கே.சிவக்குமார்..?

கர்நாடகா தேர்தல் : ஆப்ரேசன் ‘கை’யை கையில் எடுக்கிறாரா டி.கே.சிவக்குமார்..?

டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார்

தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக குமாரசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளதால், கர்நாடகாவின் மீது ஒட்டுமொத்த கவனமும் திரும்பியுள்ளது. ஆட்சியமைப்பதற்கு அனைத்து வழிகளையும் பின்பற்றுவோம் என்று பாஜக மூத்த தலைவரும், அமைச்சருமான அசோகா தெரிவித்திருப்பதும், ஆப்ரேசன் கை-யை செயல்படுத்த காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், நிச்சயம் ஆட்சியமைப்போம் என்று அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் அசோகா உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஆட்சியமைக்க தேவையான இடங்கள் கிடைக்காவிட்டால், கட்சி மேலிடத் தலைவர்களின் வழிகாட்டுதல்படி ஆட்சியமைப்பதற்கான மாற்று திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அவர் கூறியுள்ளார். அப்படியெனில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடக் கூடும் என்று எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

இதையும் படிங்க : கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்..

மறுபக்கம், காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே சிவக்குமார் ஆப்ரேசன் ‘கை’ என்ற பெயரில் மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுக்க திட்டமிட்டுள்ளதாகவும், கருத்துகணிப்புகளின் படி, பெரும்பான்மை பெற வாய்ப்புள்ள காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்க பாஜக சார்பில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.,க்கள் சிலரின் மனநிலை மாறக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியுடன் பாஜக மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக வியாழனன்று சிங்கப்பூருக்கு சென்ற மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி இன்று காலை பரபரப்பான சூழலுக்கு இடையே பெங்களூரு திரும்ப உள்ளார்.

தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தனது நிபந்தனைகளை ஏற்கும் கட்சிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என்று குமாரசாமி அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.அரசை வழிநடத்துவதில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று முதன்மையான நிபந்தனையோடு, நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை கேட்டுப் பெறவும் குமாரசாமி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

top videos

    எனவே, கர்நாடகாவில் கடந்த தேர்தல் முடிவுகள் மீண்டும் உருவாகுமா? அல்லது கிங் மேக்கர் குமாரசாமியின் துணையின்றி பாஜக அல்லது காங்கிரஸ்சால் ஆட்சியமைக்க முடியுமா? குதிரை பேரக் காட்சிகள் மீண்டும் அரங்கேறுமா? என கர்நாடக மக்களுடன் தேசமே ஆவலோடு எதிர்பார்க்கிறது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் ஆவல் இருக்கதானே செய்யும்..!

    First published:

    Tags: Karnataka, Karnataka Election 2023, Politics