கர்நாடகாவில் தேர்தல் பரப்புரைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலமான கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் அக்கட்சியும், ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் மற்ற கட்சிகளும் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
திங்கட்கிழமை மாலையுடன் பிரச்சாரம் ஓய்வடையும் நிலையில், பெங்களூருவில் 2வது நாளாக பிரதமர் மோடி வாகன பேரணி மேற்கொண்டார். கெம்பே கவுடா சிலையில் இருந்து எம்.ஜி. சாலையில் உள்ள trinity circle வரை 10 கிலோ மீட்டருக்கு திறந்த வாகனத்தில் பயணம் சென்ற அவருக்கு வழிநெடுக்கிலும் பாஜகவினர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். கலைநிகழ்ச்சிகள், மேள தாளங்கள் என்று அவரது பேரணி சென்ற வழிநெடுகிலும் விழா கோலம் பூண்டது.
பின்னர் சிவமோகாவில் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், ’பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்து வருவதாக கூறினார். கர்நாடகாவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும், பாஜக ஆட்சியில் பின்வழியாக பதவி பெறும் வழிமுறைகள் தடுக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதே போல், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பெலகாவியில் வாக்கு சேகரித்தார். பின்னர், அங்கிருந்து பெங்களூரு வரை தொடர்ந்து 6 இடங்களில் ஊர்வலமாக அமித்ஷா சென்றார். விஜய்நகர் மாவட்டத்தில் உள்ள ஹரபனஹள்ளியில் பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டா சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரித்தார்.
மங்களூருவில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும், பெலகாவியில் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்தும், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மற்றொரு புறம், பெங்களூருவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த ராகுல்காந்தி, திடீரென டெலிவரி பாய் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பயணித்தார்.
பின்னர் ஆனேக்கல்லில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி, வெறுப்பு அரசியலால் மணிப்பூர் பற்றி எரிகிறது என்றும் இந்த வெறுப்பு அரசியலுக்கு எதிராகத்தான் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டதாகவும் கூறினார். கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி 2,500 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.
.@RahulGandhi ji had a candid conversation with gig workers and delivery partners of Dunzo, Swiggy, Zomato, Blinkit etc at the iconic Airlines Hotel in Bengaluru, today.
Over a cup of coffee and masala dosa, they discussed the lives of delivery workers, lack of stable employment… pic.twitter.com/qYjY7L03sh
— Congress (@INCIndia) May 7, 2023
வேலையில்லாத் திண்டாட்டம், 40% கமிஷன் அரசு உள்ளிட்டவைதான் வன்முறைக்கு காரணம் என்று என்று மூட்பித்ரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டினார்.
இதையும் வாசிக்க: ’தி கேரள ஸ்டோரி' படத்தை எதிர்ப்பவர்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவானவர்கள்...’ மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் காட்டம்
இதனிடையே, கமலாபூரில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், பெங்களூருவில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.