திருமணத்திற்காக கல்யாண மண்டபம் வகைக்கு அதிக தொகை செலவழிக்கப்படும் இந்த கால கட்டத்தில் ரூ.500 வாடகைக்கு கல்யாண மண்டபம் வாடகைக்கு விடப்படுகிறது. இந்த மண்டபத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதிகரித்து வரும் பணவீக்கத்தில், ஒவ்வொருவரும் குறைந்த செலவில். திருமணத்திற்கு குறைவாக செலவழிக்க விரும்புகிறார்கள். இப்போதெல்லாம் திருமண மண்டபம் என்று சொன்னால், அதன் முன்பதிவு லட்சக்கணக்கில் செல்கிறது. ஆனால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் பீகார் மாநிலம் கயாவில் மிகக் குறைந்த செலவில் திருமணம் செய்துகொள்ளும் இடம் உள்ளது. கயாவின் பாங்கேபஜாரின் பாங்கேதாமில் அமைந்துள்ள சிவன் கோயிலைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அதன் அருகாமையில்தான் இந்த மண்டபம் அமைந்துள்ளது.
பீகார் மாநிலம் கயா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பாங்கேபஜாரில் பாங்கேதம் என்ற இடம் அமைந்துள்ளது. இதனை பாபா போலே நகரம் என்றும் அழைக்கிறார்கள். பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் இந்த சிவன் கோவிலுக்கு வருகை தருகின்றனர். எந்த ஒரு பக்தன் இங்கு மனதார வேண்டினாலும் அவனது விருப்பம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால்தான் திருமணத்தின்போது இங்கு அதிக எண்ணிக்கையில் கூட்டம் கூடுகிறது.
இங்கு திருமணம் நடத்தப்படும் சமுதாய கூடத்தில் ரூ.500-க்கு திருமணத்திற்கான முன்பதிவு நடத்தப்படுகிறது. 1988ம் ஆண்டு முதல் இங்கு திருமணம் செய்யும் வழக்கம் துவங்கியதாக கூறப்படுகிறது. இன்று மக்கள் அதிக எண்ணிக்கையில் திருமணத்திற்காக இங்கு வருகிறார்கள். இங்கு ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமணத்திற்கு வந்தவர்களுக்காக தர்மசாலா மற்றும் சமுதாய கூடமும் கட்டப்பட்டுள்ளது. மணமகன் தரப்பிலிருந்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். மணமகள் தரப்பிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கப்படுவதில்லை.
இதற்கு அருகிலுள்ள கட்டிடத்தை தங்குவதற்காக வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். முதல் தளத்தின் வராண்டாவில் 250 ரூபாயும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்திற்கு 900 ரூபாயும், சமூக கட்டிடத்திற்கு 500 ரூபாயும் செலுத்த வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடியில் 6 அறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு திருமணமான பின் திருமணச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன, இதற்கு மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் இருக்க வேண்டும். திருமணத்திற்கு மணமக்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை கொண்டு வருவது அவசியம்.
இந்த மண்டபம் குறித்து, வனத் துறை அதிகாரி அஜய் பாஸ்வான் கூறுகையில், ‘’1987-88 ஆம் ஆண்டு முதல் இங்கு திருமண பாரம்பரியம் தொடங்கி இன்றும் தொடர்கிறது. திருமணத்தின் புனித பந்தத்தில் தங்களைக் இணைத்துக் கொள்ள மக்கள் தொலைதூர இடங்களிலிருந்து வருகிறார்கள். இங்கு சிவன் மற்றும் சூரிய கடவுள் கோவில் உள்ளது. வேறெங்கிலும் இல்லாத அளவுக்கு இங்கு குறைந்த செலவில் திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கானோர் இதனால் பலன் அடைகின்றனர் என்று கூறினார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அருண்குமார் பாண்டே கூறுகையில், இங்கு திருமணத்திற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமுதாயக் கூடத்திற்கு கூடுதலாக தர்மசாலா கட்டப்பட்டுள்ளது. திருமணத்திற்கு, மணமகன் தரப்பிலிருந்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, அதே நேரத்தில் மணமகள் தரப்பிலிருந்து பணம் எடுக்கப்படவில்லை. திருமணத்திற்குப் பிறகு திருமணச் சான்றிதழும் வழங்கப்படுகிறது என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bihar