சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அண்ணாமலை முன்பு முன்னாள் முதலமைச்சர்கள் கைகட்டி நிற்கும் நிலை உள்ளது என்று காங்கிரஸ் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனையடுத்து, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய பிரதான கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் பா.ஜ.க கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியும் கடும் எதிர்ப்புகளுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. பசவராஜ் பொம்மை ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
அதேநேரத்தில் கட்சியிலும் மூத்த தலைவர்களுக்கு பலருக்கு சீட் கொடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கப்படாத நிலையில் பா.ஜ.கவிலிருந்து விலகினார். அடுத்த நாளே காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கப்பட்டது. கர்நாடகாவின் பா.ஜ.க பொறுப்பாளராக அண்ணாமலை உள்ளதால் அங்கே தீவிர பிரச்சாரத்திலும் கட்சிப் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீர் ஷெட்டர், ‘சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அண்ணாமலை முன்பு முன்னாள் முதலமைச்சர்கள் கைகட்டி நிற்கும் நிலை பாஜகவில் உள்ளது. கர்நாடகாவில் தானும் எடியூரப்பாவும் முதலமைச்சர்களாக இருந்தபோது அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்ததாக குறிப்பிட்டார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்தும் அண்ணாமலை தலைமையில் பாஜக 4 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது என்றும் தேர்தலில் எந்த அனுபவமும் இல்லாத அண்ணாமலை முன் கட்சியின் மூத்த தலைவர்கள் அமர வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை பாஜகவில் உள்ளதாகவும் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
என்னைப் போல் 6 அல்லது 7 முறை எம்எல்ஏவாக இருந்தவர்கள் ஏராளம். ஆனால் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத ஒருவர் நமது மாநில தேர்தல் பொறுப்பாளராக உள்ளார். சமீபத்தில் நாங்கள் கோர் கமிட்டி கூட்டத்தில் அண்ணாமலை முன் வரிசையில் அமர்ந்திருந்த போது முன்னாள் முதலமைச்சர்களான நானும் சதானந்த கவுடாவும் பின்வரிசை உறுப்பினர்களாக அமர்ந்திருந்தோம்.
நாங்கள் அவருக்குக் கீழ் சிறு குழந்தைகளைப் போல அமர்ந்திருக்கிறோம். ஏன் இந்த அவமானம்? அது ஏன் தேவைப்பட்டது? இதையெல்லாம் நாங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தாங்கிக் கொண்டிருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.