ஒரு மன்னனிடம் இருந்து மற்றொரு மன்னனுக்கு ஆட்சி ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்பதன் அடையாளமாக செங்கோல் பயன்படுத்தப்பட்டது. செங்கோலை பெறும் ஆட்சியாளர், நியாயமாகவும், நடுநிலையாகவும் ஆட்சி புரிவதற்கான ஆணையை பெறுவார். செங்கோலில் உள்ள நந்தி நியாயத்தை குறிக்கிறது.
இந்த செங்கோல் என்ற சொல் செம்மை என்ற வார்த்தையில் இருந்து வந்துள்ளது. இதற்கு நேர்மை என்று பொருளாகும். இந்தியாவில் சோழர்கள் காலத்தில் இதற்கான நடைமுறை அமலில் இருந்துள்ளது.
ஆங்கிலேயர்கள் கையில் இருக்கும் ஆட்சி இந்தியர்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது என்பதை குறிக்க என்ன செய்ய வேண்டும் என நேருவிடம் மவுன்ட்பேட்டன் பிரபு கேள்வி எழுப்பினார். இது பற்றி ஜவகர்லால் நேரு ராஜாஜியின் உதவியை நாடினார்.
அப்போது ஒரு மன்னனிடம் இருந்து மற்றொரு மன்னனுக்கு ஆட்சி மாறும்போது சோழர்கள் கால நடைமுறையாக செங்கோல் வழங்கும் முறையை ராஜாஜி நேருவிடம் தெரிவித்தார்.
உடனே தஞ்சாவூரில் உள்ள திருவாவடுதுறை ஆதினத்தை ராஜாஜி அணுகினார். ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் 5 அடி உயரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோலை உருவாக்க திருவாவடுதுறை ஆதினத் தலைவர் உத்தரவிட்டார். இதன்படி சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு நகைக்கடையில் உம்மிடி எத்திராஜலு, உம்மிடி சுதாகர் ஆகியோர் செங்கோலை வடிவமைத்துள்ளனர்.
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி, திருவாவடுதுறை ஆதினத்துணைத்தலைவர், நாதஸ்வர வித்துவான் ராஜரத்தினம் பிள்ளை, ஓதுவார் ஒருவர் என 3 பேர் செங்கோலுடன் டெல்லிக்கு சென்றனர். அன்றைய தினம் மவுன்ட் பேட்டன் பிரபுவிடம் செங்கோலை கொடுத்து மடாதிபதி மீண்டும் செங்கோலை வாங்கிக் கொண்டார்.
இதையும் படிக்க : புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இடம்பெறும் தமிழ்நாட்டின் செங்கோல் - மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு
1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி தேவாரப்பாடல்கள் பாடப்பட்டு, செங்கோல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அன்று இரவே செங்கோல் ராஜேந்திரபிரசாத்தின் முன்னிலையில் நேருவிடம் அளிக்கப்பட்டது.
தற்போது இந்த செங்கோல் இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்புக்கு முன்பு பிரதமர் மோடியிடம் மீண்டும் அளிக்கப்பட இருக்கிறது. அந்த செங்கோலானது சபாநாயகரின் வலதுபக்கத்தில் வைக்கப்பட இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Vista, PM Narendra Modi