டிவி., மிக்சி..,செல்போன் எல்லாம் மாதத்தவணையில் வாங்கிய காலம் போய் தற்போது மாம்பழங்களையும் மாதத்தவணையில் வாங்கிக்கொள்ளும் திட்டம் அறிமுகமாகியுள்ளது. ஆம் நீங்கள் கேட்டது சரிதான்..வெயில்காலம் வந்தாலே மாம்பழ சீசன் தொடங்கிவிடுகிறது.
இந்தாண்டு கோடை காலத்தில் புனேவில் அல்போன்சா மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. 12 பழங்கள் விலை ஆயிரத்து 200 ரூபாய் வரை விற்கப்படும் சூழலில் இப்போது வாங்கிக்கொண்டு பின்னர் மாதத்தவணையில் பணம் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கிரடிட் கார்டு மூலம் வாங்கிக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாம்பழமும் கோடைக்காலமும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கிறது. கோடை காலம் தொடங்கும் போது, மாம்பழ பிரியர்கள் நல்ல சுவையான மாம்பழங்களைத் தேடத் தொடங்குகிறார்கள். ஆனால் நல்ல தரமான மாம்பழங்கள் ஆரம்பத்தில் அதிக விலையில் இருக்கும். ஹபஸ் மாம்பழங்கள் மிக உயர்தர வகையை சேர்ந்தவை. இவை சந்தைக்கு முதலில் வரும்போது மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
இதனால் இந்தவகை பழங்களை வாங்குவதற்கு மாம்பழ பிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, புனேவை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர், இ.எம்.ஐ.,யில் விற்க புதிய ஐடியாவை கூறியுள்ளார். இதை நம்புவது மக்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் இந்த சம்பவம் உண்மையிலேயே நடந்துள்ளது.
இந்த திட்டத்தை புனேவை சேர்ந்த குரு சனாஸ் என்பவர் தொடங்கி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
கோவிட் நாட்களில் மக்கள் குறைந்த வருமானத்தால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. பலரிடம் மாம்பழம் வாங்கக் கூட பணம் இல்லை. குழந்தைகளின் வற்புறுத்தலால் கூட மக்கள் மாம்பழங்களை வாங்க முடியாத காலம் அது, அவர்களால் 4-5 மாம்பழங்கள் மட்டுமே வாங்க முடிந்தது. இது என்னை வேறு விதமாக சிந்திக்க வைத்தது. இதன் அடிப்படையில்தான் தவணை முறையில் தரமான மாம்பழங்களை வழங்கும் திட்டம் உருவானது. இதற்கு சில நிபந்தனைகளையும் வைத்துள்ளோம். தவணை முறையில் மாம்பழம் வாங்க விரும்பும் நபர் வங்கியில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை வைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் 30 ஆயிரத்திற்கு மாம்பழம் வாங்குகிறார் என்றால், அவரிடம் மாதந்தோறும் ரூ. 2,500 மட்டுமே பிடித்தம் செய்து கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maharashtra