பிரெட் அல்லது ரொட்டி என்றாலே அது பேக்கிங் செய்யப்படும் உணவுப்பொருள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், மரத்தில் பழுக்கும் பழம் ஒன்றின் தன்மை பிரெட் போலவே இருக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இந்தப் பழத்திற்குப் பெயரே பிரெட் பழம் தான். வெண்ணெய் சுவை கொண்ட அவகோடா பழத்திற்கு வெண்ணெய் பழம் என்று மற்றொரு பெயரும் உண்டு. அது போலவே தான் பிரெட் பழமும்.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு தினாப்பூர் மாவட்டம், காலியாகஞ்ச் என்னும் பகுதியைச் சேர்ந்த கோவிந்த சாஹா என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் இந்த மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 6 மாதங்களுக்கு முன்னால் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மகசூல் கொடுக்கத் தொடங்கிவிட்டதாம். இந்த மரம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, தோற்றம் எப்படி உள்ளது என்பதை கோவிந்தா சாஹா விவரிக்கிறார்.
பார்ப்பதற்கு பலாப்பழம் போலவே இருக்கும் :
பிரெட் பழம் குறித்து கோவிந்தா சாஹா கூறுகையில், “6 மாதங்களுக்கு முன்னால் வங்கதேசத்தில் இருந்து இந்தச் செடியை வரவழைத்து சோதனை முறையில் பயிர் செய்தேன். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சாகுபடி தொடங்கியது. ஏப்ரல் மாத மத்தியில் பூ பூக்கத் தொடங்கியது. ஆகஸ்ட் மாத தொடக்கம் முதல் செப்டம்பர் வரையில் அதிக மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஒரு பெரிய மரத்தில், ஒரு சீசனுக்கு 500 பழங்கள் வரையில் காய்க்கும். ஒவ்வொரு பழமும் அரை கிலோ முதல் 6 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். இந்த பிரெட் பழம் பார்ப்பதற்கு பலாப்பழம் போல உள்ளது. பழத்தை மரத்தில் இருந்து வெட்டும்போது பலாப்பழம் போன்றே பால் வடிகிறது. பழத்தின் உட்புறப் பகுதியும் பலாப்பழம் போன்றே இருந்தாலும், இதன் சுவை சர்க்கரை வள்ளிக்கிழங்கு போல இருக்கிறது.
பிரெட் பழத்தில் கொட்டைகள் கிடையாது. மரத்தின் வேர் பகுதியை எடுத்துதான் அடுத்த செடியை உற்பத்தி செய்ய முடியும். கொஞ்சம் நிழல் கொண்ட பகுதியில் இது அருமையாக வளரும். வெயில் காலத்தில் சின்னஞ்சிறு செடிகளுக்கு தினந்தோறும் தண்ணீர் விட வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இயற்கை உரம் போட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
ஊட்டச்சத்து கிடைக்குமா?
பலாப்பழ தோற்றம், பிரெட் போன்ற தன்மை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற சுவை என்று இருந்தாலும் பிரெட் பழத்தில் ஏதேனும் சத்துக்கள் இருக்குமா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இதுகுறித்து மருத்துவர் சின்மோய் தேப்குப்தா கூறுகையில், “பிரெட் பழத்தில் பொட்டாசியம் சத்து மிகுதியாக உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் மற்றும் இதய நலன் மேம்படும்.
Also Read : மழை வேண்டி பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராமம்.. கர்நாடகாவில் சுவாரஸ்யம்!
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தக் கூடியது மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது நல்ல நிவாரணம் தரும். மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, விட்டமின்கள் மற்றும் மினரல்கள் என சத்துள்ள பழமாக பிரெட் பழம் உள்ளது’’ என்று தெரிவித்தார். எனினும், ரத்தக்கசிவு அல்லது அலர்ஜி போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடக் கூடாதாம்.
பொதுவாக இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து போன்ற மலைப்பகுதிகளைக் கொண்ட நாட்டில் மட்டுமே வளரக் கூடிய பிரெட் பழமானது தற்போது சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுவது குறிப்பிடத்தக்க தகவலாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fruits, Local News