மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக டெல்லியை நோக்கி விவசாயிகள் படையெடுத்த நிலையில், அவர்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்திய போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் 2 ஆம் கட்ட போராட்டம் 14வது நாளை எட்டியுள்ளது. பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும், அவரை பதவி நீக்கி கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
போராட்டம் நடைபெறும் இடங்களில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை நிறுத்தி அரசு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், தங்களிடம் தேவையின்றி தகராறில் ஈடுபட்டு குடிபோதையில் போலீசார் தாக்கியதாகவும் மல்யுத்த வீரர், வீரங்கனைகள் குற்றஞ்சாட்டினர். இப்படி தங்களை துன்புறுத்துவதற்கு பதில் தங்கள் பதக்கங்களையும் விருதுகளையும் திரும்பப்பெற்றுக்கொள்ளுங்கள் என்று மத்திய பாஜக அரசிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மற்றும் மல்யுத்த போட்டிகளுக்கு செலவழித்த விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மல்யுத்த போட்டிகளுக்கு என்று அரசு ரூ.150 கோடி செலவிட்டு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா விவசாய சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன. சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றி கண்ட இந்த அமைப்பின் போராட்ட அறிவிப்பால், ஜந்தர் மந்தரில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi, Delhi farmers, Wrestlers