ஆந்திர மாநிலம் பீமவரத்தை சேர்ந்த வாலிபர் கார்த்தி என்பவர் ஹைதராபாத்துக்கு வந்து தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்று பிரபலப்படுத்தி கொண்டார். அவரை உண்மையிலேயே ஐபிஎஸ் அதிகாரி என்று கருதிய பலர் அவருக்கு மரியாதை கொடுக்க துவங்கினர். மேலும் பலருடைய நட்பும் கிடைத்தது.
இதனால் கிடைத்த புகழ், மரியாதை ஆகியவற்றை அனுபவித்து பார்த்த அவர் அதனை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் போட்டார். ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆகிய நான் சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க செய்ய இயலாது. எனவே தனியாக அலுவலகம் திறந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டப்பஞ்சாயத்து பாணியில் நீதி வழங்கப் போகிறேன் என்று புறப்பட்ட அவர் இதற்காக ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் பகுதியில் அலுவலகம் திறந்தார்.
கொடுக்கல் வாங்கல் தகராறு, நிலப் பிரச்சினை, காதல் பிரச்சினைகள், கள்ளக்காதல் பிரச்சனைகள், திருமணம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் தீர்வு காண இயலாத பிரச்சினைகளை பாதிக்கப்பட்டவர்கள் கார்த்தியிடம் தெரிவித்து நீதி கேட்டு செல்ல ஆரம்பித்தனர்.
அவர்களிடம் இந்த பிரச்சனைக்கு இவ்வளவு என்று கரராக பேரம் பேசி முடித்த கார்த்தி, எதிர் தரப்பினரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு நான் ஐபிஎஸ் அதிகாரி, நீ உடனடியாக இங்கு வரவேண்டும். இல்லை என்றால் நான் வருவேன். நான் வந்தால் நன்றாக இருக்காது என்று மிரட்டி அவர்களை தன்னுடைய அலுவலகத்திற்கு வரவழைப்பார்.
அவருடைய அலுவலகத்திற்கு வந்தவர்கள் மீது கொடூர குற்றவாளிகளுக்கு காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் தேர்டு டிகிரி சிகிச்சை அளித்து அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி ஒரு பகுதியை புகார் அளித்தவருக்கு கொடுத்து விட்டு மீதியை தானே வைத்து கொள்வார் கார்த்தி.
நிலம் சம்பந்தமான பிரச்சினைகளில் இதே போன்ற முறையை கையாண்டு பலரை மிரட்டிய கார்த்தி நிலத்தை எழுதி வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பலரிடம் போலீசில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி லட்சக்கணக்கான ரூபாயை அவர் அபகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு பெண் விஷயத்தில் தலையிட்ட கார்த்தி தன்னுடைய பாணியில் செயல்பட்டு அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார். அந்த பெண் சைபராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்க யார் அந்த ஐபிஎஸ் என்று போலீசார் ரகசிய விசாரணை நடத்தி உள்ளனர்.
மேலும் படிக்க... கள்ளக்காதலால் விபரீதம்... சாம்பாரில் விஷம் வைத்து மாமனார், மாமியாரை கொன்ற பெண்... ஓராண்டுக்கு பின் கைது..!
அப்போது அவர் போலி ஐபிஎஸ் என்பதும் அவரிடம் சைரன் பொருத்தப்பட்ட கார், துப்பாக்கி, போலீஸ் அடையாள அட்டை, போலீஸ் சீருடை ஆகியவை இருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த போலி ஐபிஎஸ் அதிகாரியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் கைது செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் முன்னாள் குற்றவாளி என்பதும் பலமுறை சிறைக்கு சென்று திரும்பியவர் என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவருடைய செல்போனை ஆய்வு செய்தபோது பொது மக்களுக்கு அவர் காவல் நிலையத்தில் வழங்குவது போல் தேர்டு டிகிரி சிகிச்சை கொடுத்தது தெரிய வந்துள்ளது. கார்த்தியிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் பணம், ஒரு துப்பாக்கி, ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள், கட்டப் பஞ்சாயத்தின் போது பொதுமக்களை துன்புறுத்த பயன்படுத்தப்பட்ட பயங்கர ஆயுதங்கள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
செய்தியாளர்: புஷ்பராஜ், தெலுங்கானா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Fake News, Hyderabad, IAS Transfer, Telangana