நாட்டிலேயே முதல் முறையாகக் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களின் முக அடையாளத்தை வைத்து அவரது விபரங்களைச் சரிபார்க்கும் முறையை இந்தியத் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
உலகிலேயே மிக அதிக மக்கள் தொகையை கொண்ட நாடு இந்தியா. இங்கு ஒவ்வொரு முறையும் கோடிக்கணக்கான வாக்காளர்களை முறைப்படுத்தி, முறைகேடு ஏற்படாமல் தேர்தல் நடத்தி முடிப்பது என்பது மிகப்பெரிய சாதனையாக உள்ளது.
இதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வாக்குச் சீட்டு முறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.
அதே போல் வாக்குச் சாவடிகளில் உண்மையான வாக்காளர் தானா என்பதை அறிந்து கொள்ளத் தேர்தல் ஆணையம் பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிய தொழில்நுட்பத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிமுக செய்துள்ளது. இந்த முறைப்படி வாக்காளரின் முகத்தைத் தொழில்நுட்பம் மூலம் அடையாளம் காணமுடியும்.
முதல்கட்டமாக கர்நாடகா தேர்தல் களத்தில் இந்த புதிய தொழில்நுட்பத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தேர்தலில் பெங்களூருவின் மாநில தலைமைத் தேர்தல் அலுவலகத்திற்கு அருகில் அரண்மனை ரோட்டில் உள்ள அரசு ராமநாராயண் செல்லாராம் கல்லூரி வாக்குச்சாவடியில் அறை எண் 2-ல் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு வாக்களிக்கும் வாக்காளர்கள், தங்களின் செல்போனில் 'சுனாவனா' என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதில் வாக்காளர் அடையாள அட்டை எண், செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு 'ஓ.டி.பி.' என்ற ரகசிய எண் வரும். அதனை உள்ளீடு செய்து, வாக்காளர் தனது புகைப்படத்தை செல்பி எடுத்து அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்த பிறகு அந்த வாக்காளர், வாக்குச்சாவடிக்குள் சென்று முகம் அடையாளம் காணும் ஸ்கேனர் கருவி முன்பு நிற்க வேண்டும்.
அந்த ஸ்கேனர் கருவி வாக்காளரைப் புகைப்படம் எடுத்து வாக்காளரின் விபரங்களைச் சரிபார்க்கும் அந்த விபரங்கள் தேர்தல் ஆணைய விவரங்களுடன் பொருந்தினால், அவர் எந்த ஆவணத்தையும் காட்டாமல் நேரடியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். இந்த வசதியால் கள்ள ஓட்டுப் போடுவது தடுக்கப்படுவதுடன் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நடைமுறை வெற்றி பெற்றால் அடுத்தடுத்து நடைபெறும் தேர்தல்களில் இந்த நடைமுறையைப் படிப்பாகத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka, Karnataka Election 2023