முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதியில் தீவிரவாதிகள்..? இமெயில் தகவலால் பரபரப்பு... தீவிர சோதனையில் போலீசார்!

திருப்பதியில் தீவிரவாதிகள்..? இமெயில் தகவலால் பரபரப்பு... தீவிர சோதனையில் போலீசார்!

திருப்பதி

திருப்பதி

திருப்பதி மலையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக திருப்பதி போலீசாருக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து வந்த இமெயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி மலையில் தீவிரவாதிகள் நுழைந்து இருப்பதாக திருப்பதி போலீசாருக்கு இமெயில் அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகம் முழுவதிலும் இருந்து திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருவது வழக்கம். பல லட்சம் பக்தர்களும், பல கோடி ரூபாய்க்கு உண்டியல் பணமும் குவியும் திருப்பதியில் மக்கள் கூட்டமும் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் திருப்பதி மலையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக திருப்பதி போலீசாருக்கு இமெயில் வந்துள்ளது. இதனால் பரபரப்பும் அதிர்ச்சியும் அடைந்த போலீசார், இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகள், தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் ஆகியோருக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து திருப்பதி மலை முழுவதும் ஹை அலர்ட் எச்சரிக்கை விடுத்து போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தினர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்கள், நடந்து மலையேறி செல்லும் பக்தர்கள் ஆகியோர் உட்பட அனைவரும் தீவிர சோதனை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இது தவிர திருப்பதி மலை முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்திய போலீசார், கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள், சாமி தரிசன வரிசைகள், லட்டு கவுண்டர், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் மண்டபங்கள், மொட்டை போடும் நிலையங்கள் ஆகிய அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் கையில் எடுத்து செல்லும் உடைமைகளையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திருப்பதி மாவட்ட எஸ்பி பரமேஸ்வர ரெட்டி, போலீசாருக்கு கிடைத்த இமெயில் வெறும் புரளி. எனவே பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். இருந்தும் திருப்பதி மலையில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

top videos

    செய்தியாளர் : புஷ்பராஜ் (திருப்பதி)

    First published:

    Tags: Terrorists, Tirumala Tirupati, Tirupati