முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகாவில் புயலைக் கிளப்பும் ஹெலிகாப்டர் அரசியல்...

கர்நாடகாவில் புயலைக் கிளப்பும் ஹெலிகாப்டர் அரசியல்...

அண்ணாமலை பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

அண்ணாமலை பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

Karnataka Election 2023 | கொளுத்தும் கோடை வெயிலை மிஞ்சும் வகையில் கர்நாடகாவை ஹெலிகாப்டர் அரசியல் ஆட்டிப் படைக்கத் தொடங்கியுள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அண்ணாமலை ஹெலிகாப்டரில் கட்டு கட்டாக பணம் எடுத்து வந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தேர்தல் என்றாலே திருவிழா தான். நூதன பரப்புரை, அதிரடி அறிவிப்புகள், சரமாரி குற்றசாட்டுகள் என அரசியல் களமே அனல் பறக்கும். தேர்தல் களம் மட்டும் சூடாக இருக்காது, ஆகாயத்திலும் அனல் பறக்கும் எனக் கூறும் வகையில் அரசியல்வாதிகள் வான் மார்கமாக பறந்து பறந்து பரப்புரை மேற்கொள்வது வழக்கம்.

குறிப்பாக ஹெலிகாப்டருக்கும், தேர்தலுக்கும் நெருக்கம் அதிகம். பிரதமர் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் மட்டுமின்றி மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் கமல்ஹாசன் என உள்ளூர் அரசியல் தலைவர்களும் ஹெலிகாப்டரை பயன்படுத்த தவறியதில்லை. இந்த வரிசையில் தற்போது சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டிருக்கும் கர்நாடகாவிலும் ஹெலிகாப்டர் அரசியல் சூடுபிடித்துள்ளது. ஆரம்பமே அதிரடி என்பது போல் அங்கு தற்போது ஹெலிகாப்டர் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.

பாஜகவின் கர்நாடக தேர்தல் பொறுப்பாளரும் அங்கு ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்தவரும் நேர்மையான தேர்தல் பற்றி தொடர்ந்து பேசி வருபவருமான அண்ணாமலை, உடுப்பிக்கு கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளுடன் ஹெலிகாப்டரில் பறந்ததாக காங்கிரஸ் வேட்பாளரான வினய் குமார் சொரகே குற்றம்சாட்டி அரசியல் சூட்டை கிளப்பினார். இதனை திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை, மூத்த காங்கிரஸ் நிர்வாகியான வினய் குமார், தோல்வி பயத்தில் பொய்ப் புகார் அளிப்பதாக கூறினார்.

இதையும் படிங்க: உள்ளே.. வெளியே.. சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல் களம்..!

இருந்தாலும் தேர்தல் அதிகாரிகள் அண்ணாமலை பயணம் செய்த ஹெலிகாப்டரை துருவித் துருவி சோதனையிட்டனர். ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை. அண்ணாமலையைத் தொடர்ந்து பெரும் கோடீஸ்வரரான அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் துமகூரு பகுதிக்கு ஹெலிகாப்டரில் பறந்தார். இம்முறை உஷாரான தேர்தல் பறக்கும்படையினர் அவர் தரை காலில் படுவதற்கு முன்பே உள்ளே ஏறி சோதனையிட்டனர்.

top videos

    ஹெலிகாப்டர் அரசியல் தேர்தல் களத்தை மட்டுமின்றி தேர்தல் ஆணைய அதிகாரிகளையும் ஒரு கைபார்த்து வருகிறது எனும் வகையில் ஹெலிகாப்டரில் பிரசாரம் மேற்கொள்வதற்கான நட்சத்திர பரப்புரையாளர்களின் படிவங்கள் அவர்களின் மேசைகளில் மலை போல் குவிந்துள்ளன. குறிப்பாக நான் ஈ திரைப்பட நடிகர் சுதீப், பிரகாஷ்ராஜ் என பிரபலங்கள் வாக்கு சேகரிக்க வானில் வரிசை கட்டவுள்ள நிலையில் அதை நினைத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் மலைத்துப் போயுள்ளனர். இவ்வாறாக கொளுத்தும் கோடை வெயிலை மிஞ்சும் வகையில் கர்நாடகாவை ஹெலிகாப்டர் அரசியல் ஆட்டிப் படைக்கத் தொடங்கியுள்ளது.

    First published:

    Tags: Annamalai, BJP, Helicopter, Karnataka Election 2023