முகப்பு /செய்தி /இந்தியா / செய்தியாளர் சந்திப்பின்போது நடந்த கொலை… உத்தரப் பிரதேச தாதா கொலை வழக்கின் பின்னணி என்ன?

செய்தியாளர் சந்திப்பின்போது நடந்த கொலை… உத்தரப் பிரதேச தாதா கொலை வழக்கின் பின்னணி என்ன?

அடிக் அகமது

அடிக் அகமது

Atiq Ahmed | மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு கொடூரமான குற்றங்கள் உத்தரப் பிரதேசத்தில் பதிவாகும் நிலையில், அடிக் அகமது மற்றும் அவரது சகோதரரின் படுகொலை இன்னுமொரு அச்சம் தரும் சம்பவமாக அமைந்துள்ளது.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

பொதுவாக பரபரப்புக்கு பஞ்சமில்லாத உத்தரப் பிரதேச மாநிலம் மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துள்ளது. அடிக் அகமது கொல்லப்பட்ட விவகாரம் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. சரி, அடிக் அகமது யார்? எதற்காக அவர் கொல்லப்பட்டார்?

அடிக் அகமது நாடாளுமன்ற உறுப்பினரா அல்லது கேங்ஸ்டரா என்று கேட்டால், அதற்கான பதில், இரண்டும்தான். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒருவர் ரவுடியாக வாழ்க்கையை தொடங்கி அதன்பின் கட்சியில் சேர்ந்து படிப்படியாக கவுன்சிலர், எம்.எல்.ஏ. என பெரிய பதவிக்கு முன்னேறுவார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், புதுப்பேட்டை படம் தொடங்கி நிறைய படங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். ஆனால், நிஜத்திலோ அடிக் அகமதுவின் வாழ்க்கை சற்று ரிவர்ஸ்… அரசியல்வாதியாக இருந்து ரவுடியாக மாறியவர். இருந்தாலும், இவ்வளவு பெரிய டான் ஆவதற்கு முன்பே 1979ஆம் ஆண்டு, அதாவது தனது 17ஆம் வயதிலேயே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிரிமினல் உலகத்திற்குள் அடியெடுத்து வைத்தார் அடிக் அகமது.

இவர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். ஐந்து முறை எம்.எல்.ஏ புல்பூர் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பி என சமாஜ்வாதி கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் இருந்தபோது அந்த கட்சியின் செல்வாக்கான தலைவராக இருந்தார். 2005ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ ராஜூ பால் கொலை செய்யப்பட்ட வழக்கில் அடிக் அகமது, அவரின் மனைவி ஷைஸ்டா பர்வீன், அவருடைய இரண்டு மகன்கள், சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதன்பின் அரசியல்வாதியாக இருந்த அடிக் அகமது டானாக மாறத் தொடங்கினார். ஆகிலேஷ் யாதவ் தலைவராக வந்த பிறகு அடிக் கட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஒரு கட்டத்தில் பிரயாக்ராஜின் தவிர்க்க முடியாத டானாக உருவானார் அடிக் அகமது. உத்தரப் பிரதேச காவல்துறையின் தகவலின் படி, அடிக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 160 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் 100 வழக்குகள் அடிக்குக்கு எதிராகவும், 52 வழக்குகள் அவரது தம்பி அஷ்ரஃப்-கிற்கு எதிராகவும், 3 வழக்குகள் அவரின் மனைவி ஷைஸ்டா பர்வீனுக்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கமான ஐஎஸ்ஐ-யுடன் தொடர்பு இருப்பதாக கூறி அடிக் மற்றும் அவரின் நெருக்கமானவர்களிடம் இருந்து சுமார் 11,684 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகளும் வெளியாகின.

உத்தரப் பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு அடிக் அகமதை நோக்கி சில முக்கிய விஷயங்கள் நடந்தன. அடிக் அகமது மற்றும் அவரின் குடும்பத்தின் மீதான நடவடிக்கைகள் இறுக்கப்பட்டன, சட்ட விரோதமான அவரின் தொழில்கள் முடக்கப்பட்டன, அவரின் வழக்குகள் மீதான விசாரணையும் துரிதப்படுத்தப்பட்டன.

மேலும், ரியல் எஸ்டேட் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துகளும் முடக்கப்பட்டன. ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அடிக்கின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து வந்த உமேஷ் பால் என்பவர் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அடிக் அகமது ஆட்களால் படுகொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது போல இந்த கொலை வழக்கில் அடிக் அகமது, அவரின் மனைவி, இரண்டு மகன்கள், சகோதரர் ஆகியோர் மேல் வழக்குப்பதியப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அர்பாஸ் மற்றும் உஸ்மான் ஆகிய அடிக் அகமதுவின் கூட்டாளிகள் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தனித்தனியே கொல்லப்பட்டனர். உமேஷ் பால் கொலைக்கு பிறகு அடிக் மற்றும் அவரின் குடும்பத்தினரின் பெயர்கள் பெருமளவு அடிப்படத் தொடங்கியது. உமேஷ்-ன் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த அடிக்கின் மகன் அசாத், உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படையால் என்கவுண்ட்டரில் கடந்த 13ஆம் தேதி கொல்லப்பட்டார்.

காவல்துறையால் அடிக் அகமதுவின் கூட்டாளிகள், மகன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்த நிலையில், அதுவும் குறிப்பாக தன்னுடைய மகன் இறந்த இரண்டே நாளில் சிறையில் இருந்து அடிக் அகமதுவும், அவரின் சகோதரரும் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படும்போது போலீசாரின் கண்ணெதிரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அடிக் அகமதுவை ஒன்பது முறையும், அஷ்ரஃப்-ஐ ஐந்து முறையும் கொலையாளிகள் சுட்டதாக தகவல் வெளியானது. இவர்கள் இருவரையும் சுட்டுக்கொன்ற பின்னர், கொலையாளிகள் ’ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்பியதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது. இந்த கொலை வழக்கில் மூன்று பேர் சரணடைந்துள்ளனர். கொலை குறித்து அவர்கள் வாக்குமூலம் கொடுத்ததாக வெளியான தகவலின்படி, சமூகத்தில் பிரபலமடைவதற்காக இந்த படுகொலையை செய்ததாகவும், இந்த செயலின் மூலம் தங்களுக்கு எதிர்கால நன்மைகள் கிடைக்கும் எனவும் அந்த கொலையாளிகள் கூறியதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

அடிக் மற்றும் அவரது சகோதரர் நேரலையிலேயே படுகொலை செய்யப்பட்டது தேசிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு கொடூரமான குற்றங்கள் உத்தரப் பிரதேசத்தில் பதிவாகும் நிலையில், இந்தக் கொலை இன்னுமொரு அச்சம் தரும் சம்பவமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் யோகி ஆதித்யநாத்தின் அரசு பெரும் தோல்வி அடைந்துள்ளதற்கு இந்த படுகொலை ஒரு உதாரணம் என அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு இரண்டு சிறப்பு அதிரடிப்படையை நியமித்துள்ளது. மற்றொரு பக்கம், தற்போதைய தகவலின்படி, அடிக் அகமதுவின் மனைவி ஷைஸ்டா, யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், இந்த குற்றத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியிருப்பதாக தெரிகிறது. ஆக, சட்ட நடவடிக்கையின்படி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா, இல்லையா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

First published:

Tags: UP encounters, Uttar pradesh