காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியின் இல்லத்தில் டெல்லி காவல்துறையினர் இன்று காலை குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி கூறிய கருத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
ஜனவரி மாத இறுதியில் தனது பாரத் ஜோடோ யாத்திரையை ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ராகுல் காந்தி நிறைவு செய்தார். தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், நாட்டில் பெண்களுக்கு இன்னும் உரிய பாதுகாப்பு இல்லை, தனது நடைபயணத்தின் போது பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளான பல பெண்களை சந்தித்தாக கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு விளக்கம் கேட்டு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு ராகுல் பதில் அளிக்காத நிலையில், தற்போது அவரது இல்லத்திற்கே நேரில் சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: தப்பியோடிய காலிஸ்தான் தலைவர்.. முடக்கப்பட்ட இணைய சேவைகள்... பஞ்சாப்பில் உச்சக்கட்ட பரபரப்பு..!
இது தொடர்பாக டெல்லி காவல் சட்ட ஒழுங்கு சிறப்பு ஆணையர் பீர் ஹூடா கூறுகையில், "மார்ச் 15ஆம் தேதி அன்றே ராகுல் காந்தியை தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் எங்களை அவர் சந்திக்கவில்லை. அடுத்த நாளும் முயற்சி செய்தோம். பின்னர் நோட்டீசும் அனுப்பினோம். ஆனால் பதில் தராததால் நேரில் வந்து அவரிடம் விசாரிக்கிறோம். அவரிடம் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை கேட்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
A govt rattled by Shri Rahul Gandhi’s questions on PM Modi & Adani’s relationship hides behind its police.
45-days after Bharat Jodo Yatra was completed, Delhi Police has, via a notice, sought details of women who met him & spoke about harassment & violence they may have faced. pic.twitter.com/XBJrWFsd5H
— Congress (@INCIndia) March 16, 2023
டெல்லி போலீஸ் வருகைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தனது ட்விட்டர் பதிவில், அதானி விவகாரத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகளால் அச்சம் கொண்ட அரசு இது போன்ற நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. யாத்திரை முடிந்து 45 நாள் கழித்து ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை நாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். ஜனநாயகம், பெண்கள் மேம்பாடு, கருத்து சுதந்திரம், எதிர்க்கட்சி ஆகியவற்றை பலவீனமாக்கவே அரசு இதை செய்கிறது" என்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi, Rahul Gandhi