சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தடை செய்யக் கோரும் காங்கிரஸ் கட்சியை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கடுமையாக சாடியுள்ளார். வாக்கு வங்கி நோக்கத்திற்காக ஒரு சிலரை திருப்திப்படுத்த எதிர்க்கட்சிகள் எந்த மட்டத்திலும் இறங்கலாம் என்றும் தாக்கூர் கூறினார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக தலைவர்களில் ஒருவரும், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருமான அனுராக் தாக்கூர் இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "தி கேரளா ஸ்டோரி' எனும் திரைப்படம் பயங்கரவாத சதியை அடிப்படையாகக் கொண்டது. பயங்கரவாதத்தின் கோர முகம் கிழிபட்டுவிட்டது. சிலர் உண்மைகளை மறைக்க திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். தடை செய்ய வேண்டுமென கோருபவர்கள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கும், பயங்கரவாதத்துக்கு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் ஆதரவானவர்கள் என்றும் தெரிவித்தார்.
கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. முன்னதாக, இத்திரைப்பட ட்ரைலரில், கேரளாவைச் சேர்ந்த 32,000-க்கும் அதிகமான பெண்கள் திட்டமிட்டு இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவதாக காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இத்தகைய திரைப்படங்கள் இஸ்லாமியர் - இந்துக்கள் இடையே பிரச்னைகளை உருவாக்கும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே, இந்த திரைப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலும், சென்னை, கேரள உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணையின் போது, எதனடிப்படையில் 32,000 பேர் மதம் மாற்றப்பட்டு தீவிரவாத செயல்களில் பயன்படுத்தப்பட்டனர் என்ற முடிவுக்கு வந்தீர்கள்? அதற்கான தரவுகள் எங்கே? என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினார். இதையடுத்து, 32,000 ஆயிரம் என்ற எண்ணிக்கையை நீக்குவதாகவும், 'உண்மைக்கதை இல்லை, இது முற்றிலும் கற்பனையே' என்று Disclaimer பதிவிடுவதற்கும் தயாரிப்புக்குழு ஒப்புக் கொண்டது. இதையடுத்து, திரைப்படம் வெளியானது.
இதையும் வாசிக்க: கர்நாடகா தேர்தல் 2023 - இரண்டாவது நாளாக பிரம்மாண்ட சாலை பேரணி... தீவிர வாக்கு சேகரிப்பில் பிரதமர் மோடி
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜகவின் மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி முன்னதாக தனது தேர்தல் பிரச்சாரத்தில், ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தீவிரவாத சதியை அடிப்படையாகக் கொண்டது. தீவிரவாதிகள் மேற்கொள்ளும் வஞ்சக திட்டங்களை அம்பலப்படுத்துகிறது.
தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது. தீவிரவாத போக்குடன் நிற்கும் காங்கிரஸ், வாக்கு வங்கி அரசியலுக்கான பயங்கரவாதத்தை பாதுகாக்கிறது" என்று தெரிவித்தார். இது முற்றிலும் கற்பனையே என்று பதிவிடுவதாக படக்குழு நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்த பின்பு பிரதமர் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கும் கேரளா ஸ்டோரி எனும் திரைப்படத்திற்கு நாட்டின் பிரதமர் ஆதரவு தெரிவிப்பது கண்டனத்துக்குரியது என்று எதிர்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.