பாலியல் அச்சுறுத்தல்களை தந்ததாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடந்து வரும் போராட்டம் 8வது நாளை எட்டியுள்ளது.
இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளின் தாக்கமாகவும் நீதிபதிகளின் வலியுறுத்தலின் பேரிலும் பிரிஜ் பூஷன் மீது டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இரண்டு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டன. ஆனால் பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் இதேபோன்ற போராட்டம் நடைபெற்ற போது, அரசியல் கட்சிகள் இதில் தலையிட வேண்டாம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் இம்முறை, அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து ஆதரவளித்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிக்க : காங்கிரஸ் என்னை 91 முறை அவமதித்துள்ளது - தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி
இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் மேற்கொண்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, பதக்கங்கள் வென்றால் மட்டுமே பிரதமர் மோடி வீரர், வீராங்கனைகளை அழைத்து டீ விருந்தளிப்பார் என்று கூறினார். இதுவரை இவர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்காததற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பிரிஜ் பூஷன் தனக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் சில தொழிலதிபர்களும், காங்கிரசும் உள்ளதாக குற்றஞ்சாட்டினார். இந்த போராட்டம் அரசியலாக உருமாற்றம் அடைய தொடங்கி உள்ள நிலையில், தாங்கள் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று வீராங்கனை சாக்சி விளக்கம் அளித்துள்ளார்.
45 நாட்களில் இந்திய மல்யுத்த சம்மேளத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் பிரிஜ் பூஷன் பதவி நீக்கப்பட்டு கைது செய்யப்படுவாரா என்பதே வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.