முகப்பு /செய்தி /இந்தியா / தமிழகத்தில் பாஜக கட்டமைப்பை வலுப்படுத்த உழைத்து வருகிறோம் - அமித் ஷா

தமிழகத்தில் பாஜக கட்டமைப்பை வலுப்படுத்த உழைத்து வருகிறோம் - அமித் ஷா

அமைச்சர் அமித் ஷா

அமைச்சர் அமித் ஷா

நியூஸ் 18 தொலைக்காட்சி குழுமத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக கட்டமைப்பை வலுப்படுத்த உழைத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூஸ்18 தொலைக்காட்சி குழுமத்தின் ரைசிங் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்திற்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத பிரதமரை எதிர்க்கட்சிகள் சாடுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

நியூஸ்18 குழுமத்தின் ரைசிங் இந்தியா நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், தர்மேந்திரா பிரதான், நிதின் கட்கரி, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நியூஸ்18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அமித் ஷா, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவார் என்றும், கடந்த முறையை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றார். சட்டவிதிகளுக்கு உட்பட்டே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்ற அமித் ஷா, 2 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்றார். இத்தகைய செருக்கின் மூலம் கிடைத்த ஆதாயம் என்ன என்றும் வினவினார்.

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத, பிரதமர் மற்றும் சபாநாயகரை எதிர்க்கட்சிகள் சாடுவது ஏன் என்று அமித்ஷா கேள்வி எழுப்பினார். சட்டம் அனைவருக்கும் சமமானது என்று கூறிய அமித்ஷா, காந்தி குடும்பத்திற்கு மட்டும் தனி விதி இயற்ற வேண்டுமா என்று கடுமையாகச் சாடினார்.

Also Read: ‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் TRP ரேட்டிங் மட்டுமே அதிகரிக்கும் – 2024-லும் மோடி ஆட்சிதான்’ - அமித் ஷா பேச்சு

மேலும், நாட்டிற்காகத் தியாகம் செய்த சாவர்க்கரின் பெயரை ராகுல் காந்தி பயன்படுத்தக் கூடாது என்று கூறினார். ஓ.பி.சி. பிரிவு மக்களை அவமதித்த ராகுல், சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக கட்டமைப்பு வலுவின்றி உள்ளது. அதைச் சரிப்படுத்தக் கடுமையாக உழைத்து வருகிறோம். முன்னேற்றமும் கண்டுள்ளோம். பல தொலைதூர கிராமங்களையும், வாக்குச்சாவடிகளையும் பாஜக எட்டியுள்ளது. எங்கெல்லாம் பாஜக வலுக்குறைந்துள்ளதோ, அங்கு எங்களது கூட்டணிக் கட்சிகள் கைகொடுக்கும். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக பாஜக இடையே கருத்து மோதல் நீடித்து வரும் நிலையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விரும்புவதாகவும் தகவல் வெளியானது. இச்சூழலில் அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம் என நியூஸ்18க்கு அமித் ஷா அளித்த பேட்டி தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

First published:

Tags: AIADMK, Amit Shah, BJP, NEWS18 RISING INDIA