முகப்பு /செய்தி /இந்தியா / நண்பன் விபத்தில் உயிரிழப்பு; சொந்த வீட்டை விற்று மக்களுக்கு இலவச ஹெல்மெட் கொடுக்கும் நபர்- நெகிழ்ச்சி சம்பவம்

நண்பன் விபத்தில் உயிரிழப்பு; சொந்த வீட்டை விற்று மக்களுக்கு இலவச ஹெல்மெட் கொடுக்கும் நபர்- நெகிழ்ச்சி சம்பவம்

பீகார் நபர்

பீகார் நபர்

பீகாரைச் சேர்ந்த நபர் சொந்த வீட்டை விற்று மக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கிவருகிறார்.

  • Last Updated :
  • Bihar, India

இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் அதிகம் உயிரிழப்பு ஏற்படுவது இரு சக்கர வாகன விபத்துகளில் தான் என்றும், இரு சக்கர வாகன விபத்துகள் ஏற்படும் போது, தலைக்கவசம் அணியாதவர்கள் 90 சதவீதத்திற்கும் மேல் உயிரிழக்கிறார்கள் என்றும் மத்திய அரசின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதனால் நாடு முழுவதும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருகிறது.

ஆனாலும், ஹெல்மெட் அணிவது குறித்து இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்நிலையில் தனது சொந்த செலவில் ஹெல்மெட் வாங்கி கொடுத்து, தலைகக்வசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் பீகாரை சேர்ந்த ஒருவர்.

ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் நின்று கொண்டு இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி புத்தம் புதிய ஹெல்மெட்டுகளை ஒருவர் விநியோகிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

அவருக்கு பாராட்டுகள் குவிந்ததோடு, அந்த நபர் யார் என்று நெட்டிசன்கள் தேடியே போது அவர் தொடர்பான விபரங்கள் கிடைத்தது. அவர் பெயர் ராகவேந்திர குமார் என்பதும், அவர் பீகாரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஏன் இப்படி தனது சொந்த பணத்தை செலவு செய்து ஹெல்மெட் தானம் செய்கிறார் என ஆர்வமுடன் விசாரித்த போது தான் முழு விபரமும் கிடைத்துள்ளது.

ராகவேந்திர குமாரின் நெருங்கிய நண்பர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராகவேந்தரின் நண்பர் உயிரிழந்திருக்கிறார். அப்போது முதல் ஹெல்மெட் தானம் செய்யத் தொடங்கியிருக்கிறார் ராகவேந்திர குமார். இது வரை நாடு முழுவதும் சுமார் 56,000 ஹெல்மெட்டுகளை தானம் செய்திருக்கிறாராம் ராகவேந்தர் குமார்.

ஹெல்மெட் வாங்குவதற்கு பணத் தடை ஏற்பட்ட போது, நொய்டாவில் இருக்கும் தனக்கு சொந்தமான வீட்டை விற்றும், தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் அதன்மூலம் கிடைத்த பணத்தில் ஹெல்மெட்டுகளை வாங்கி தானம் செய்து வருகிறார் ராகவேந்தர் குமார். இவரின் செயலை அறிந்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி ராகவேந்தரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

அதே போல் சமூக சேவகரும் நடிகருமான சோனு சூட்டும் ராகவேந்தரை பாராட்டியுள்ளார். தன்னை பைத்தியக்காரன் என்றும், முட்டாள் என்றும் பலரும் திட்டுவதாகவும், ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தொடர உள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ராகவேந்தர்.

செலவை குறைப்பதற்காக நொய்டாவில் இருந்து பீகாரில் இருக்கும் தனது சொந்த கிராமத்திற்கு குடி பெயர உள்ளதாகவும், தனது ஆறு வயது மகனை சொந்த கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும் கூறுகிறார் ராகவேந்தர். தன்னமில்லாத இவரின் சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

First published:

Tags: India