தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறுவது பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநலன் மனுவில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது லாவண்யாவின் தற்கொலைக்கான அடிப்படை காரணத்தை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும், பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அளித்தும், அச்சுறுத்தியும் நடைபெறும் மதமாற்றங்களை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் எனவும் மதமாற்ற தடை சட்டத்தை மத்திய மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பள்ளி மாணவி லாவண்யாவின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும் லாவண்யாவின் தற்கொலையை தமக்கு சாதகமாக திசை திருப்ப மனுதாரர் முயல்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாவண்யாவின் தற்கொலை குறிப்பில், விடுதி காப்பாளர் வழங்கிய கூடுதல் வேலைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெளிவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. என்ன சட்டம் இயற்ற வேண்டும் என்பதை சட்டமன்றத்துக்கு விட்டுவிட வேண்டும் என்றும், என்ன சட்டம் வேண்டும், எது வேண்டாம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும் எனவும், தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக வாழ்வதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல் என்றும், மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.