வளர்ப்புத் தாயின் கொடுமை தாங்க முடியவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்த சிறுவன். ஆந்திராவில் 4ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன், தன்னுடைய வளர்ப்புத்தாய் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து நிகழ்வு பேசுபொருளாக மாறியுள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், சிறுவனின் பெற்றோரை அழைத்து, இரு தரப்பிலும் அறிவுரைகளை வழங்கியதோடு, நல்லிணக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆந்திராவின் எளூரு மாவட்டம், கொதப்பேட்டை பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. தினேஷ் என்ற அந்த மாணவன், தனக்கு வாழ்க்கையில் மிகுதியான கொடுமைகள் இழைக்கப்படுவதாக உணர்ந்தான். தினேஷின் தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து விட்டார். இதையடுத்து தினேஷின் தந்தை வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் நண்பனின் பிறந்தநாள் விழாவுக்கு செல்ல தினேஷ் குளித்துவிட்டு தயாராகிக் கொண்டிருந்தான். விழாவுக்கு செல்ல வெள்ளைச்சட்டை வேண்டும் என்று தன் சின்னம்மாவிடம் தினேஷ் கேட்டானாம். ஆனால், கேட்டபடி வெள்ளைச்சட்டை கொடுக்காதது மட்டுமல்லாமல் விழாவுக்கே செல்ல வேண்டாம் என்று அவர் கட்டுப்பாடு விதித்தாராம். ஆனால், தினேஷ் அடம்பிடித்த நிலையில், சின்னம்மா அவனை அடித்ததாக தெரிகிறது. இதனால், வெறுப்படைந்த தினேஷ், குளித்தபோது கட்டிய துண்டுடன் காவல்நிலையத்திற்கு வந்துவிட்டான்.
Read More : '1'வது பிளாட்பாரம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்.. சுவாரஸ்ய பின்னணி கொண்ட பீகார் கதை!
தன்னுடைய சின்னம்மா மீது காவல்நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தான். இதைக் கண்டு ஒருகனம் திகைத்துப் போன போலீஸார் தினேஷின் தந்தை மற்றும் அவனது சின்னம்மா ஆகியோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அங்கு பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.காவல் நிலைய ஆய்வாளர் பி.சந்திரசேகர், சிறுவனிடம் பொறுமையாக குறைகளை கேட்டறிந்தார். சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று பெற்றோரிடம் அவர் அறிவுறுத்தினார்.
காவல் நிலையத்தில் சிறுவன் புகார் அளித்த விவகாரம் வைரல் செய்தியாக பரவியது. காவல்நிலையம் வரை சென்று புகார் அளிக்கும் அளவுக்கு தைரியம் கொண்ட சிறுவனுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதேபோல உள்ளூர் மக்கள் மத்தியிலும் இந்த விவகாரம் குறித்து ஆச்சரியத்துடன் விவாதித்து வருகின்றனர்.
அதேசமயம், காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளிப்பது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்பு ஒருமுறை தன் சின்னம்மா தாக்கியது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீண்டும் அதேபோன்ற புகார் வந்த நிலையில், தினேஷிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என்று வளர்ப்புத் தாயிடம் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதே சமயம், பெற்றோருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், குடும்பத்தில் பிடிவாதம் செய்யக் கூடாது என்றும் சிறுவனிடம் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Viral