மின்சாரம் என்று சொல்லும் போதே ஷாக் அடிக்கும் அளவுக்கு மின்சார கட்டணமும், மின்சாரப் பயன்பாட்டை குறைக்கவே முடியாத அளவுக்கு தேவையும் நீடித்து வருகிறது. மாற்று ஆதாரங்களிலிருந்து மின்சாரம் பெற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மாணவன் ஒருவன், ஷூவில் இருந்து மின்சாரம் உருவாகும் முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதைப் பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.
ஹூக்லி சந்தன் நகர், பராசத் தேபாரா என்ற பகுதியில் வசித்து வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவனான சௌவிக் சேத் என்ற சிறுவன் தான் இந்த அற்புதமான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் கண்டறிந்த ஷூவைப் போட்டு நீங்கள் நடக்கும்பொழுது அதிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகும். இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து நீங்கள் உங்கள் மொபைல், ஜிபிஎஸ் டிராக்கிங் உள்ளிட்ட பலவிதமான சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
9 ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவனுக்கு எலெக்ட்ரானிக்ஸ் மீது சிறு வயதிலிருந்தே மிகப்பெரிய ஆர்வம் இருந்து வந்துள்ளது. தன்னுடைய ஐந்தாம் வகுப்பில் இருந்தே, எலெக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட வேலை செய்து வந்த தனது மாமாவுடன் அதிக நேரம் செலவழித்துள்ளார். இவர் படித்து படித்து வரும் சந்தன் நகர் கனாய்லால்ல் பள்ளியில் (Chandannagar Kanailal School) கூட ஏகப்பட்ட அறிவியல் சார்ந்த டிஸ்பிளேக்களை வைத்து விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி செயல்படுகிறது 'ஸ்மார்ட் ஷூ'
ஷூவை போட்டுக்கொண்டு நடந்தாலே எப்படி மின்சாரம் உற்பத்தியாகும் என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இந்த ஷூக்களைப் போட்டுக்கொண்டு நடக்கும்போது 20,00 எம்ஏஎச் (MAH) பேட்டரி அளவுக்கு மிக எளிதாக சார்ஜ் செய்ய முடியும் என்று கூறுகிறார் சௌவித். ஒரு கிலோமீட்டர் நடந்தாலே இந்த பேட்டரி சார்ஜ் ஆகிவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார். தற்போது வெளிப்புறமாகவே இந்த ஸ்மார்ட் ஷூ அமைப்பை வடிவமைத்துள்ள இந்த சிறுவன், இன்னும் ஒரு மாதத்துக்குள்ளே அதன் அடிப்பகுதியில் அனைத்து சாதனங்களுக்கும் சார்ஜ் செய்யும் செய்யும் வகையில் வடிவமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவனின் அற்புதமான முயற்சிக்கு ஏதேனும் ஒரு ஷூ உற்பத்தி நிறுவனம் இவருக்கு பண ரீதியாக உதவி செய்ய வேண்டும். ஷூக்களின் உலகில் இது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதையும் படிங்க: கைகளை இழந்தால் என்ன... தன்னம்பிக்'கை'யால் சாதிக்கும் இளைஞர்!
டிரெக்கிங் செல்பவர்களுக்கு வரப்பிரசாதம்
அதேபோல இவரது இந்த ஸ்மார்ட் ஷூ மாடல் வெற்றி பெற்றால், சார்ஜிங் தேவைகளில் மிக பெரிய ஒரு புரட்சியை உண்டாக்கும் என்று கூறலாம். அது மட்டும் இல்லாமல் பயணங்கள், டிரெக்கிங் செல்பவர்கள், நீண்ட தூரம் நடைபயணம் செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது குறித்து சௌவிக் பேசுகையில், “பயன்படுத்தாமல் தூக்கி எறியப்பட்ட பொருட்களில் இருந்துதான் நான் இந்த ஸ்மார்ட் ஷூ அமைப்பை வடிவமைத்தேன். அது மட்டுமல்லாமல் இதில் ஜிபிஎஸ் சிஸ்டமும் இருக்கிறது எனவே குழந்தைகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும் பொதுவாக குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்கு நீண்ட நேரம் ஆகும். ஆனால் இந்த ஷூக்களை அணிந்திருந்தால், அவர்களை மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அது மட்டுமில்லாமல், குழந்தை எங்கிருக்கிறது என்பதும் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த ஷூக்களில் ஸ்பை கேமராக்களும் பொருத்தப்பட்டு இருக்கிறது. எனவே குழந்தையின் அருகில் வேற யாரும் சந்தேகப்படக்கூடிய நபர் இருந்தால், அதையும் உடனடியாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும். குறிப்பாக ஷூக்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது” என்று கூறுகிறார்.
ஷூக்களின் அம்சங்களை பற்றி மட்டுமே தெரிவித்து வந்த இந்த மாணவன் ஷூ எவ்வாறு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது என்பதையும் விளக்கியிருக்கிறார். “நாம் நடக்கும்பொழுது கைனடிக் எனர்ஜி உருவாகும்; அந்த எனர்ஜியிலிருந்து மின்சாரம் ஜெனரேட் ஆகிறது. சாதாரணமாக நடப்பதை விட மலைகளில் ஏறுபவர்களுக்கு இது கூடுதலாக பலன் அளிக்கும். எனவே நாம் சாதாரணமாக நடந்தாலே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்” என்பது மிகப் பெரிய கண்டுபிடிப்பாக என்பதில் சந்தேகமே இல்லை.
யாரேனும் பெரு நிறுவனங்கள் தன்னை தொடர்பு கொள்வார்களா என்று ஆவலுடன் காத்திருப்பதாக அந்த மாணவன் ஆர்வத்துடன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.