இன்றைய இளைய சமூகம் 1 கிலோமீட்டர் நடந்துசெல்ல கூட ஓராயிரம் முறை யோசித்துவிட்டு ஓலாவை புக் செய்கிறார்கள். அவ்வளவு தூரம் நடப்பதா என்ற சலிப்பு. மற்றொரு புறம் நடப்பதற்கான வலு அனைவரிடமும் இருப்பதில்லை. இன்றைய சமூகம் டயட் என்று சாப்பிடும் உணவுகளை பார்க்கும் முதியவர்கள், ‘வளர்ர புள்ள என்ன கொறிச்சுட்டு இருக்கீங்க? நல்லா சாப்பிட்டா தான தெம்பு இருக்கும்’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.
80 களில் இருக்கும் தாத்தா பாட்டிகள் சுறுசுறுப்பாக நடமாடிக்கொண்டு, வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் 20 வயது இளைஞன் தெருமுனையில் உள்ள கடைக்கு போய்விட்டு வந்து அசதி போக தூங்குகிறான். அதேநேரம் பலசாலி ஆகவேண்டும் என்று மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
அதே போல உடலை வலிமையாக்க வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து உடற்பயிற்சி கூடங்களில் தஞ்சம் அடைகிறார்கள். புரதம் வேண்டும் என்று டப்பாக்களில் உள்ள ப்ரோட்டீன் பவுடர்களை வாங்கி சாப்பிடுகிறார்கள். இது சரியான வழியா? 80 வயதிலும் கடுமையான வேலை செய்யும் ரங்கி என்ன சொல்கிறார் என்று கேட்போம்.
பீகார் மாநிலம், மேற்கு சம்பாரண் பகுதியில் ரங்கி மஹ்தோ என்ற நபர் வாழ்ந்து வருகிறார். 84 வயதான இவர், நல்ல திடகாத்திரமான உடல் அமைப்போடு சுறுசுறுப்பாக கிராமத்தின் குறுக்கும் நெடுக்குமாக உலவி வருகிறார். என்னடா இது கயிற்று கட்டிலில் படுத்து காலாட்டி தூங்கும் வயதில் இப்படி ஓடிக்கொண்டு இருக்கிறார் என்று பார்த்தோம்.
பெட்டியாவில் வசிக்கும் ரங்கியிடம் பேசும்போது அவருக்கு தினமும் வேலை செய்தால் தான் பொழுதே கழியும் என்கிறார். அடி பம்ப் மெக்கானிக்காக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தினமும் உடல் உழைப்புகளை கட்டாயம் என்று நினைக்கிறார். அதற்காக தினமும் பாறைகளை உடைத்து நிலத்தடி நீரை வெளியேற்றும் வேலையை செய்து வருகிறார்.
கொரோனா பயத்தால் வீட்டில் அனைவரும் முடங்கி இருந்த போதும் தினமும் வேலைக்கு செல்வது வழக்கம் என்று அவர் கூறுகிறார். சளி மற்றும் இருமல் இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் என்னை தாக்கும் என்று நான் பயப்படவில்லை. என் வேலையை நான் செவ்வனே செய்து வந்தேன். அது தான் என்னை மேலும் வலிமையாக்கியது என்கிறார்.
உணவைப் பொறுத்தவரை, அவர் எடுத்துக் கொண்ட உணவை இன்று யாரும் எடுப்பதில்லை என்று கூறுகிறார். அவர் தனது குழந்தைப் பருவத்தில் கோடோ சாதம், மடுவா புஞ்சா, மதுவாக்கி(ராகி) ரொட்டி, கம்பு, சோளம், இனிப்பு உருளைக்கிழங்கு, சுத்தமான மற்றும் உலர்ந்த தானியங்கள் போன்றவற்றைச் சாப்பிட்டாராம்.
ராங்கி ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் அவர்களுக்கு பருப்பு, அரிசி, காய்கறிகள், பால் கிடைக்கவில்லை.அதனால் இந்த தானியங்களை எல்லாம் ஒன்றும் விடாமல் சாப்பிட்டு வளர்த்துள்ளார். இன்று அதன் விளைவாக, முதுமையிலும் அவர் முற்றிலும் ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் இந்த டயட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்கு இந்த தானியங்கள் அதிக கிடைப்பதில்லை. கிடைத்தாலும் விலை அதிகமாக உள்ளது. ஆனால் இந்த தானியங்களில் செய்யும் சில உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடல் திறனை அதிகரிக்கலாம். இவற்றில் பால் அவசியம் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தவிர அரிசிக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்தார். நல்ல உணவு தான் நல்ல ஆரோக்கியத்தை தரும்.
இதையும் பாருங்க : கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!
சுறுசுறுப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு, வெல்லத்துடன் பருப்பை கலந்து உட்கொள்ள வேண்டும். உடல் வலிமைக்கும், உள்ளுறுப்புக்கும், சாதம் தயாரிக்கும் போது வெளிவரும் கஞ்சி மற்றும், உடலில் ரத்தத்தை உண்டாக்கும் கீரை சூப், அதிக எடையைத் தூக்கும் வலுவை தரும் உளுத்தம் பருப்பு போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது போன்ற ஆரோக்கிய உணவுகளை உண்பதால் ஆரோக்கியமும், வலிமையான உடலும் கிடைக்கும் என்று டிப்ஸ் தருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.