முகப்பு /செய்தி /இந்தியா / ரிலையன்ஸ் அறக்கட்டளை ஸ்காலர்ஷிப்பிற்கு 5 ஆயிரம் மாணவர்கள் தேர்வு…

ரிலையன்ஸ் அறக்கட்டளை ஸ்காலர்ஷிப்பிற்கு 5 ஆயிரம் மாணவர்கள் தேர்வு…

ரிலையன்ஸ் அறக்கட்டளை

ரிலையன்ஸ் அறக்கட்டளை

அடுத்த 10 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவித்திருந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஸ்காலர்ஷிப்பிற்காக 5 ஆயிரம் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் சார்பாக ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் பங்கெடுத்து, ஆக்கப்பூர்வமான மாற்றத்தை கொண்டு வருவதே இந்த அறக்கட்டளையின் நோக்கமாகும். இதன் தலைவராகவும், நிறுவனராகவும் திருமதி. நீதா அம்பானி  செயல்பட்டு வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் ஆரோக்கியமான வாழ்க்கை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக கிராமப்புறங்களில் மாற்றத்தை கொண்டு வருதல், கல்வி, சுகாதாரம், விளையாட்டு மேம்பாடு, பெண்களை சக்திபடுத்துதல், பேரிடர் மேலாண்மை, கலை, கலாசார வளர்ச்சிக்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை பணியாற்றுகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் 6.95 கோடிப் பேரும், 54,200 கிராமங்களும் பலன் அடைந்துள்ளன. ரிலையன்ஸ் அறக்கட்டளை தனது சமூக நல பணிகளில் ஒன்றாக, இந்தியா முழுவதும் தகுதியுள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கல்வித்தொகை ஸ்காலர்ஷிப்புகளை வழங்கி வருகிறது.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் 2022 – 23 ஆம் ஆண்டுக்கான ஸ்காலர்ஷிப்பை பெறுவதற்காக 4,984 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களை நிபுணர்கள் குழு ஆய்வு செய்து 5 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித் தொகையை பெறுவார்கள்.

இதுகுறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ஜெகன்னாத குமார் கூறுகையில், ‘இளைஞர்களின் கல்விக் கனவை நிறைவேற்றும் வகையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இந்தியாவின் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மாணவ மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் இந்த உதவித் தொகையை பெறுகிறார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் தங்களது எதிர்காலத்தை கட்டமைப்பதுடன் இந்தியாவின் வளர்ச்சிக்கும் பங்களிப்பார்கள்’ என்று கூறியுள்ளார்.

தகுதியின் அடிப்படையில் இளங்கலை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்குகிறது. பொறியியல், தொழில்றுட்பம், அறிவியல், சட்டம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட பல பிரிவுகளில் பயின்ற மாணவர்கள் இந்த ஸ்காலர்ஷிப்பை பெறுகிறார்கள். அவர்களில் 51 சதவீதம்பேர் மாணவிகள். அடுத்த 10 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவித்திருந்தது. மேலதிக தகவல்களுக்கு www.reliancefoundation.org என்ற இணைய தளத்தை பார்வையிடலாம்.

First published:

Tags: Nita Ambani, Reliance Foundation