ஆசிரமம் என்றால் பொதுவாக ஆதரவற்றோர் அல்லது ஏதாவது ஒரு பாதுகாப்பு அமைவிடமாக இருக்கும் என்று மனதில் தோன்றும். ஆனால் இங்கு ஒரு ஆசிரமம் பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாசறையாகவும், மது ஒழிப்பு மையமாகவும், கிராமியம் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்தி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளித்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டு இன்றளவும் அதன் பழமை மாறாமல் செயல்பட்டு வருகின்றது என்று கூறினால் நம்மால் நம்ப முடியுமா.? ஆம், "அப்படி ஒரு ஆசிரமம் இன்றும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து பல பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றது காந்தி ஆசிரமம்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள புதுப் பாளையம் என்ற கிராமத்தில் 1925-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி மூதறிஞர் ராஜாஜியால் காந்தி ஆசிரமம் தொடங்கப்பட்டது. அதுமட்டுமின்றி கிராமியம் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்தி, அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் தர வேண்டும் என்பதற்காக இந்த காந்தி ஆசிரமத்தை "தந்தை பெரியார் திறந்து வைத்தார்" என்பது குறிப்பிடத்தக்கது.

1934-ல் மகாத்மா காந்தி கொடியேற்றி வைத்த கம்பம்..
இந்த ஆசிரமத்தின் மேலும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் 1925-ம் ஆண்டு மற்றும் 1934-ம் ஆண்டு என இருமுறை மகாத்மா காந்தி இங்கு வருகை புரிந்து தங்கி சென்றுள்ளார். அதுமட்டுமின்றி 1936-ம் ஆண்டு "ஜவஹர்லால் நேருவும், 1975-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர், ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், எம்.எஸ்.சுப்புலட்சுமி என பலர் இந்த ஆசிரமத்துக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் ஆசிரமத்துக்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவர்களது கையால் எழுதிய குறிப்புகள் போன்றவை இன்றளவும் ஆசிரமத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ராஜாஜி அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதுபோல், "ராஜாஜி தங்கிய அறை, அவர் பயன்படுத்திய பொருட்கள், காந்தி 2-வது முறையாக ஆசிரமத்துக்கு வந்தபோது ஏற்றிய கொடிக் கம்பம் போன்றவை ஆசிரமத்தில் உள்ளன.

ராஜாஜி தொடங்கி வைத்த காந்தி ஆசிரமம்..
தற்போது இந்த ஆசிரமத்தில் கைகளால் கொண்டே கதர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆசிரமத்தின் முக்கிய நோக்கமே அனைவரும் கதர் துணிகள் பயன்படுத்த வேண்டும் என்பது தான். இதனாலே ஆசிரமத்தில் உள்ள அனைவரும் கதர் துணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
அது தவிர்த்து கைகளால் கொண்டு வேற என்ன பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்று பார்த்தால் "இலவங்காய் உடைத்தல், ஊதுபத்தி செய்தல், இலவம்பஞ்சு கொண்டு மெத்தை, தலையணை தயாரித்தல், விவசாயத்திற்கு பயன்படும் வேப்ப எண்ணெய், தேன் உற்பத்தி, ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்றோர் என நூற்றுக்கணக்கானனோர் வேலை வாய்ப்பு பெற்று சொந்தக் காலில் நிற்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து காந்தி ஆசிரமத்திற்கு செல்லும் பாதையை காட்டும் கூகுள் வரைபடம்..
"இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தி கூறியது" இன்றுவரை நிருபிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது திருச்செங்கோடு காந்தி ஆசிரமம். இத்தகைய பெருமை வாய்ந்த ஆசிரமத்தை ஒரு சுற்றுலா தலமாகவோ அல்லது அருங்காட்சியமாகவோ மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

காந்தி ஆசிரமத்தில் உள்ள ராஜாஜி சிலை..
ஏனென்றால் இங்கு பழமை வாய்ந்த சிறப்பு அம்சங்கள் மற்றும் கிராமத் தொழில்கள் ஈடுபடுவதால் இதனை பார்வையிட ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் வருகை புரிகின்றனர். பல வெளியூர்களில் இருந்து மக்கள் வருவதால் அரசு இதனை கவனித்து ஆசிரமத்திற்கு தேவையான உதவிகள் செய்த தர வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும் காந்தி ஆசிரமத்தை தொடர் கொள்ள விரும்பினால் V.ரவிக்குமார்- செயலாளர்: 6374963200
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.