திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவின் மூன்றாவது நாள் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா கடந்த 4ம் தேதி மலையில் கொடியேற்றும் நிகழ்வுடன் தொடங்கியது. இத்தேர் திருவிழா 14 நாட்கள் கொண்ட பெரிய திருவிழாவாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த விழாவில் அர்த்தநாரீஸ்வரர் மலையில் இருந்து நகருக்கு எழுந்தருளி தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தது.
இதனிடையே விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மூன்று நாட்கள் அர்த்தநாரீஸ்வரர் பெரிய தேரோட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அர்த்தநாரீஸ்வரரை தரிசனம் செய்து பெரிய தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன் பின் ஒவ்வொரு நாளும் பூக்கடை வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரதவீதி என நான்கு ரத வீதி வழியாக தேர் பவனி வரும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனையடுத்து மூன்றாவது நாளான பெரிய தேர் நிலை சேர்க்கும் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று தேரை இழுத்து கொண்டு வந்து நிலையில் சேர்த்தனர்.
முன்னதாக பழைய பேருந்து நிலையம் அருகில் தேர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் சிறப்பு ஆராதனைகளுக்கு பின் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது.
மேலும் தேர் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.