நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வெண்பன்றி பண்ணையில் திடீரென பன்றிகள் இறந்தன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் பன்றிகளை ஆப்ரிக்க வைரஸ் தாக்கியதன் காரணமாக இறந்ததாக தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவர் சில ஆண்டுகளாக தனது தோட்டத்தில் பண்ணை அமைத்த வெண்பன்றிகள் வளர்த்து வருகிறார். இங்கு வளர்க்கப்படும் வெண்பன்றிகளை தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரது பண்ணையில் வளர்க்கப்பட்ட பன்றிகளில் 2 பன்றிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென இறந்தன. இதுகுறித்து அவர் நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற கால்நடை மருத்துவக் குழுவினர், இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் இறந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பண்ணையை கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பண்ணையில் இருந்த பன்றி குட்டிகள் உள்பட 20 பன்றிகளுக்கும் ஆப்பிரிக்க வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி, அந்த பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளையும் அழித்து, 15 அடி ஆழம் குழி தோண்டி புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பண்ணை அமைந்துள்ள இடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கால்நடை பராமரிப்பு துறையினர் கூறுகையில், “ராசிபுரம் பண்ணையில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கோ மற்ற கால்நடைகளுக்கோ பரவாது. பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும்.
இந்த நோய் வைரஸ் தாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், தீவன சாக்குப் பைகள் மூலம் பிற பன்றிகளுக்கும் மட்டுமே பரவக்கூடியதாகும். இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோய். எனவே சுத்தமாக பண்ணையை பராமரித்தல், ரசாயன கலவைக்கொண்ட நடைபாதை அமைத்தல், நீர் மற்றும் கழிவுகள் தேங்காமல் பராமரித்தல், வெளியாட்கள் பண்ணையில் நுழைவதை தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்” என்று கூறினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரக அதிகாரிகள் கூறுகையில், “நாமக்கல் மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றி செல்லும் போது அதுகுறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நோய் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே அருகாமையில் உள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை” என தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal