முகப்பு /நாமக்கல் /

4 மாதத்தில் 3 முறை தான் குடிநீர்.. நாமக்கல் மாவட்ட மக்களுக்கு வந்த அவலநிலை..

4 மாதத்தில் 3 முறை தான் குடிநீர்.. நாமக்கல் மாவட்ட மக்களுக்கு வந்த அவலநிலை..

X
மாதிரி

மாதிரி படம்

Namakkal Water Supply Issue : நாமக்கல் அடுத்துள்ள ஆண்டவர் நகர் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வழங்கப்படும் குடிநீர் சப்ளை திடீரென நிறுத்தியதால் மக்கள் அவதி.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் அடுத்துள்ள ஆண்டவர் நகர் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 198 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் கூலி தொழிலாளிகளாகவும், கணவனால் கைவிடப்பட்டவர்களாகவும், ஆதரவற்ற முதியோர்களாகவும் உள்ளனர்.

இந்த குடியிருப்புவாசிகளிடம் குடிநீருக்காக ஒவ்வொரு மாதமும் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஆண்டவர் நகர் அடுக்கு மாடி குடியிருப்போர் நல சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதே பகுதியை சேர்ந்தவர்கள் தலைவர், துணை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீருக்கு கட்டணம் வசூலிப்பது, சாக்கடை பராமரிப்பு, குப்பை சேகரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்யவும் நியமிக்கப்பட்டனர். இந்த சூழலில் சங்க நிர்வாகிகள் குடிநீருக்கு வீடு ஒன்றுக்கு 250 ரூபாய் தர வேண்டும் என கூறியதையடுத்து சங்க நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சங்கத்தின் செயல்பாடுகள் ஆரம்பித்த வேகத்திலேயே முடக்கப்பட்டது.

4 மாதத்தில் 3 முறை தான் குடிநீர்

இந்தநிலையில், இந்தாண்டு துவக்கத்தில் இப்பகுதிக்கு வழங்கப்படும் குடிநீர் சப்ளை திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எதனால் குடிநீர் நிறுத்தப்பட்டது என குடிநீர் வடிகால் வாரியத்தில் விசாரித்தபோது, அரசுக்கு குடிநீருக்காக மாதம் தோறும் செலுத்த வேண்டிய கட்டணம் செலுத்தாததால் குடிநீர் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் விநியோகத்திற்கு பணம் வசூலிக்கும் குடியிருப்பு பொறுப்பாளர்கள் சிலர் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கட்டணம் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் கடந்த 4 மாதத்தில் 3 முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த சூழலில் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் தற்போது தங்களது குடியிருப்பு பகுதியை விட்டு காலி செய்து சென்று விட்டதாகவும், எனவே பணத்தை முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து தங்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    First published:

    Tags: Local News, Namakkal