தமிழகத்தில் மொத்தம் 12525 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒரு கிராமத்துக்கு ஒரு கிராம ஊராட்சி எழுத்தர் பணியிடங்களை முன்னால் முதல்வர் கலைஞர் 1996ம் ஆண்டு தோற்றுவித்தார். அதன் அடிப்படையில் ஊராட்சி எழுத்தர்கள் பணிநியமனம் செய்யப்பட்டு மாதாந்திர தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்தனர்.
ஊராட்சி எழுத்தர்கள் ஊராட்சி உதவியாளர்களாக மாற்றப்பட்டு சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஊராட்சி செயலர்களாக்கப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு 15900-50400 என்ற ஊதிய விகிதத்தில் காலமுறை ஊதியக்கட்டில் கொண்டுவரப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
ஊராட்சி செயலர்கள் பணிநியமனம் ஊராட்சி மன்ற தலைவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவர்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அவர்களிடமே இருந்தது. அதனை பயன்படுத்தி பணியில் உள்ளோரை நிரந்தர பணிநீக்கம் செய்துவிட்டு தங்களுக்கு வேண்டிய நபர்களை நியமித்துக்கொள்ளும் நடைமுறைகள் தமிழகமெங்கும் மேலோங்கின.
இதனால் 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதிக்கப்பட்டு பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட காரணத்தால் அரசே இப்போக்கிற்கு முடிவுகட்டும் விதமாக கடந்த 2013ம் ஆண்டு ஒரு உத்தரவினை பிறப்பித்து. இனி வருங்காலங்களில் ஊராட்சி செயலர்களை அரசு உயர் அலுவலர்கள் நியமிக்கும் வகையில் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் மீது ஊராட்சி மன்ற தலைவர்கள் தடையாணை பெற்றனர். இது தொடர்பாக வழக்கு இன்று வரை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இப்பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு அமைந்த உடன் 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட பிரிவு 104&106 திருத்தங்கள் செய்யப்பட்டன.
மேலும் ஊராட்சி செயலர்களை ஊராட்சி மன்ற நியமன குழுக்கள் மூலம் இனிவரும் காலங்களில் நியமிக்க கூடாது என்று சொல்லி விதி திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது.
இதே காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதி திருத்த சட்டம் மூலம் இனி வரும் காலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் ஏற்படும் காலியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்பி கொள்ளலாம் எனவும் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.
அதே ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆறாவது மாநில நிதி ஆணைய பரிந்துரையில் கிராம ஊராட்சிகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரவு செலவுகளை மேற்கொள்ளும் கிராம ஊராட்சி செயலர்கள் பணியிடங்கள் மிக அத்தியாவசியமான பணி என்றும் இனிவரும் காலங்களில் அதை அரசு பணியாளர் தேர்வாணைய மூலம் நிரப்பிட வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. அதனை ஏற்ற அரசும் அது குறித்து தனியே பரிசீலிக்கப்படும் என சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்தது.
இதுகுறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யும் விதமாக பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இது பணியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. காலியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்போது படித்த ஏழை வர்க்க மாணவர்கள் அரசு பணிக்கு வரும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இது தவிர ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள் மூலம் சமூக நீதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தான் ஊரக வளர்ச்சித் துறையில் மகத்தான இரண்டு சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த சட்ட திருத்தத்தின் மூலமும்,ஒரு விதி திருத்தத்தின் மூலமும் ஊராட்சி செயலர் பணியிடங்கள் இனி வருங்காலங்களில் அரசு அலுவலரால் கட்டுப்படுத்தப்படும்.
அதற்குரிய பணி விதிகள் அரசாணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே முதல்வரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் அந்த பணி விதிகள் அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டி எங்கள் அமைப்பின் சார்பாக எதிர் வரும் 15.05.2023ம் தேதி முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மேலும் 5 ஆண்டுகள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தையும் கொடுத்து அவருக்கு கீழ் ஒரு அரசு அலுவலரை நியமிக்கும் அல்லது தண்டிக்கும் அதிகாரத்தையும் கொடுத்தால் எவ்வளவு பெரிய நிர்வாக சிக்கல்கள் ஏற்படும் என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். கோடிக்கணக்கில் நிதி கையாள கூடிய கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் வலுவானதாக அரசு அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக இருந்தால் மட்டுமே நிதி கையாளுகை சிறப்பாக இருக்கும்.
இதையும் படிங்க : கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி - 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம்!
காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களின் பணி நியமனம் அரசு பணியாளர் தேர்வாணைய சட்ட விதி திருத்தலின் படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மூலம் நிரப்பப்படும் பொழுது இளைஞர்களும் படித்து வேலையற்ற பட்டதாரிகளும் பொதுப்போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்ய வழிவகுக்கும். இதனை உணர்ந்து தமிழ்நாடு அரசு விரைந்து தகுந்த உத்தரவுகளை வெளியிட கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர் : ரவிச்சந்திரன் ராஜகோபால் - நாமக்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal