நாமக்கல் மாவட்டத்தில் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு - ஈரோடு செல்லும் வழியில் SPB காலனி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே பள்ளிக் கூடம் மற்றும் போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளதால் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ள சாலையின் நடுவில் வரிசையாக மின்விளக்கு கம்பங்கள் இருக்கிறது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலையின் நடுவில் உள்ள மின்விளக்கு கம்பம் ஒன்று அடியில் சேதமடைந்து சாய்ந்து நிலையில் இருக்கிறது. சாய்ந்த நிலையில் உள்ள மின்விளக்கு கம்பத்தை தற்போது வரை சரிச்செய்யாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமான பயணிகள் பேருந்தில் ஏறிச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி திருச்செங்கோடு - ஈரோடு செல்லும் முக்கிய சாலையாக இது உள்ளதால் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் மீண்டும் பலத்த காற்று வீசினால் கம்பம் சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவொரு அசம்பாவிதமும் நடப்பதற்கு முன்பு இதனை விரைந்து கவனித்து உடனடியாக மின்கம்பத்தை சரிசெய்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.