நாமக்கல் நகரின் மையப் பகுதியில், சுமார் 250 அடி உயரம் கொண்ட மலைக்கோட்டை அமைந்துள்ளது. பெருமாளுக்கு உகந்த சாளக்கிராமக் கல்லை ஆஞ்சநேயர் எடுத்து வந்ததாகவும், இங்குள்ள கமலாலயக் குளக்கரையில் வைத்துவிட்டு புனித நீராடி காயத்ரி மந்திரம் ஜெபித்து விட்டு திரும்பியபோது, கல், மலையாக உருவெடுத்து நின்றதாகவும், அதில் நரசிம்மரும், நாமகிரி தாயாரும் காட்சியளித்ததாகவும், அவர்களை வணங்கியபடி ஆஞ்சநேயரும் அங்கேயே நின்று விட்டார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
நாமகிரி என்றழைக்கப்பட்ட இந்த மலையானது பின்னாளில் நாமக்கல் என பெயர் மாற்றமானது. மலையின் மீது வரதராஜ பெருமாள் சன்னதியும், இஸ்லாமியர்களின் தர்கா ஒன்றும் உள்ளது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் இந்த மலைக் கோட்டையானது கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது.
அந்த கால கட்டத்தில் அவர் மலைக் கோட்டையில் வரதராஜ பெருமாள் கோவிலை கட்டினார். அதன்பின் ராமச்சந்திர நாயக்கரை போரில் தோற்கடித்து திப்புசுல்தான் கோட்டை கைப்பற்றினார். அப்போது அங்கிருந்த வரதராஜ பெருமாள் கோவிலை எதுவும் செய்யாமல் அதன் அருகிலேயே தர்கா ஒன்றையும் திப்பு சுல்தான் உருவாக்கினார்.
இதையும் படிங்க : அசல் பட்டு சேலையை அடையாளம் காண்பது எப்படி? - ரகசியம் உடைக்கும் காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியாளர்..
அதன் பின் வெள்ளையர்களை எதிர்ப்பதற்காக இந்தக் கோட்டையை பயன்படுத்தினார் எனவும் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. இங்கிருந்து திப்பு சுல்தானின் படைகள் எதிரிகளை கண்காணித்து அவர்களை தாக்குவதற்காக மதில்களில் சிறு சிறு துளையிட்டு வைத்துள்ளனர்.
தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்குச் செல்வதற்காக, 20 ஆண்டுகளுக்கு முன் சிறிய படிக்கட்டுகள் ஏற்படுத்தி கைப்பிடியும் அமைக்கப்பட்டது. இதன் வழியே சென்று சுற்றுலா பயணிகள் ஒட்டுமொத்த நாமக்கல்லின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.
இங்குள்ள ஆஞ்சநேயர், நரசிம்மர், அரங்கநாதரைத் தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாமக்கல் மலைக்கோட்டைக்கு வருகை புரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டு மார்கழி மற்றும் புரட்டாசி மாதம் மலையில் உள்ள வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதேபோல ஒவ்வொரு வெள்ளிகிழமையும் தர்காவில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இந்து - முஸ்லிம் மத ஒற்றுமைக்கு நாமக்கல் மலைக்கோட்டை சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal, Tamil News, Travel