முகப்பு /செய்தி /நாமக்கல் / நர்சுகளிடம் கூகுள் பே மூலம் லஞ்சம்: நாமக்கல் சுகாதார பணிகள் துணை இயக்குனர் உட்பட 3 பேர் மீது பாய்ந்தது வழக்கு!

நர்சுகளிடம் கூகுள் பே மூலம் லஞ்சம்: நாமக்கல் சுகாதார பணிகள் துணை இயக்குனர் உட்பட 3 பேர் மீது பாய்ந்தது வழக்கு!

லஞ்சம் வாங்கிய அதிகாரி

லஞ்சம் வாங்கிய அதிகாரி

Namakkal bribery | கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியதாக நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் சுகாதாரத்துறை மூலம் நடைபெற்ற கலந்தாய்வில் இடமாறுதல் பெற்ற, நர்சுகளை விடுவிக்க கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியதாக நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நாமக்கல் துணை இயக்குனர் அலுவலகம் நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

இங்கு துணை இயக்குனராக பிரபாகரன் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் முத்துமணி என்பவர் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு பணியாளராக பணியாற்றி, தற்போது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சக்திமுருகன் என்பவரும் அடிக்கடி இந்த அலுவலகத்திற்கு வந்து செல்வார்.

சென்னை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனர் மாநில அளவிலான கலந்தாய்வு அடிப்படையில் கடந்த 26.7.2021 முதல் 30.7.2021 வரை அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் புணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளை அவர்களின் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

இந்த கலந்தாய்வு அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த 76 ஒப்பந்த நர்சுகள் பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் உத்தரவு பெற்றனர். இடமாறுதலுக்கு உத்தரவு பெற்ற நர்சுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள், தாமதம் செய்யாமல் விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி மற்றும் சக்திமுருகன் ஆகியோர் கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெற்ற ஒப்பந்த நர்சுகளை, தற்போது பணிபுரியும் இடங்களில் இருந்து விடுவிக்க லஞ்ச பணம் பெறலாம் என்று திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இடமாறுதல் பெற்ற நர்சுகளிடம் ஒவ்வொருவரும் அவர்களை விடுவிக்க ரூ.25,000  முதல் ரூ.35,000 வரை லஞ்சம் கேட்டு உள்ளனர். பணம் கொடுக்காத நர்சுகளை பணியில் இருந்து விடுவிக்காமல் இழுத்தடித்து வந்தனர். லஞ்ச பணம் கொடுக்காமல் மாறுதல் உத்தரவு பெற முடியாது என்று நினைத்து சில நர்சுகள் பணம் கொடுத்து மாறுதல் உத்தரவு பெற்று சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ரகசிய தகவல் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி, இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது ஒப்பந்த அடிப்படையில் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய ஒரு நர்சு தேனி மாவட்டம், அல்லி நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெற்றிருந்தார். அவரை இந்த பணியிலிருந்து விடுவிக்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளனர்.

இதையடுத்து முன்பணமாக ரூ.10,000 கூகுள்பே மூலம் பெற்று உள்ளனர். மீண்டும் அவர்கள் அதே முறையில் ரூ.25,000 பெற்றுள்ளனர். இதேபோல் எலச்சிபாளையம், வினைதீர்த்தபுரம், திருமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றிய ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளிடமும் கூகுள் பே மற்றும் வங்கி கணக்கு மூலம் லஞ்சம் பெற்று உள்ளனர். சிலரிடம் பணமாகவும் வாங்கி உள்ளனர். மேலும் துணை இயக்குனரின் வங்கி கணக்கிற்கு சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்றதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி மற்றும் சக்திமுருகன் ஆகிய 3 பேர் மீதும் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது விரைவில் துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

செய்தியாளர்: ரவிக்குமார், நாமக்கல்.

First published:

Tags: Crime News, Local News, Namakkal, Vigilance officers