ஆன்லைன் அபராதத்தை கைவிடக் கோரி விரைவில் சென்னையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லை அடுத்த வள்ளிபுரத்தில் உள்ள சம்மேளன அலுவலகத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தன்ராஜ், ”தமிழகத்தில் இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. செய்யாத குற்றத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
வாகனங்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படும் போது வேறு மாநிலத்தில் இயக்கப்படுவது போல ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுகிறது.கடந்த ஓராண்டாக இது போன்ற பிரச்சினை லாரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டு வருகிறது.
லாரி உரிமையாளர்களின் சிரமங்களை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த மாதம் 23 -ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
இருப்பினும் ஆன்லைன் அபராதம் விதிப்பது தொடர் கதையாக உள்ளது. ஆன்லைன் அபராதத்தை கைவிடக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்களை ஒன்றுதிரட்டி விரைவில் சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் லாரிகளை எப்.சி பெற கொண்டு சென்றால் குறிப்பிட்ட கம்பெனிகளின் 3எம் ஸ்டிக்கர்களை மட்டுமே ஒட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. சாதாரணமாக வெளி மார்க்கெட்டில் ரூ.1,000க்கு கிடைக்கும் இந்த ஸ்டிக்கர்கள், குறிப்பிட்ட கம்பெனியிடம் இருந்து வாங்கினால் ரூ. 3,500 செலவாகிறது. இது குறித்து ஏற்கனவே பல முறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேசி அவர்கள் ஒப்புக்கொண்டாலும், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. இது சம்பந்தமாக ஏற்கனவே கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளோம். உடனடியாக இதை மாற்றாவிட்டால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Lorry owners strike, Namakkal