Home /namakkal /

வேட்டாம்பாடி மாரியம்மன் கோயில் திருவிழா.. நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் இதோ... 

வேட்டாம்பாடி மாரியம்மன் கோயில் திருவிழா.. நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (24.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (24.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

Namakkal District: நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில் 24.05.2022 அன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் வேட்டாம்பாடி மாரியம்மன் கோயில் திருவிழா

    நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த வேட்டாம்பாடி மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறவில்லை. தற்போது இந்த வருடத்திற்கான திருவிழா பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்வுடன் தொடங்கியது. திருவிழாவில் குண்டம் இறங்குதல்,அலகு குத்துதல்‌,தேர் ‌என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    முட்டை கொள்முதல் விலை- பண்ணையாளர்கள் கோரிக்கை

    நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் இருக்கிறது. இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கு பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையை தொடர்ந்து 30 காசுகள் வரை ஏற்றி, இறக்குவதை தவிர்க்க வேண்டும் என பண்ணையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய்

    நாமக்கல் வானிலை மாற்றத்தின் படி கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்நோயின் அறிகுறிகளாக கோழிகள் தலையை ஒரு பக்கமாக சாய்த்து கொள்ளுதல், கழிச்சல் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கைக் குறைந்து இறப்பு ஏற்படும் சூழல் இருக்கிறது. ஆகையால் பண்ணையாளர்கள் தகுந்த பராமரிப்புகளை கையாள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

    ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் 1997 முதல் 2000-ம் ஆண்டு வரை அரசியல் அறிவியல் துறை மற்றும் வரலாற்று துறையில் படித்த முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. இதில் நீதித்துறை, காவல் துறை, ஆசிரியர் பணி உள்பட பல்வேறு அரசு பணியில் உள்ள முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். தங்களுடைய பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து பரிமாறிக் கொண்டனர்.

    நாமக்கல்லில் முட்டை விலை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாக இருந்தது. இதனிடையே நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். இதனால் முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக குறைந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    கிணற்றில் விழுந்த பூனையை மீட்ட தீயணைப்பு துறையினர்

    பள்ளிபாளையம் அருகே மாதேஷ் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பூனை ஒன்று தவறி விழுந்ததாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூனையை உயிருடன் மீட்டனர்.

    விஷம் குடித்து தற்கொலை

    வேலகவுண்டன்பட்டி அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் உடல்நிலை முன்னேற்றம் இல்லை. இதனால் மனமுடைந்த பழனிசாமி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று‌ உள்ளார். இதனை அறிந்த மகள் உடனடியாக வீட்டுக்கு சென்று தந்தையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார்.

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்- காணொளி வாயிலாக துவக்கம்

    தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி மூலம் வேளாண்மை உழவர்நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் தொடக்க விழா நடைபெற்றது. இதில் தேவனாங்குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஊராட்சி மன்ற தலைவர், வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, என பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். மேலும் விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும், ஒவ்வொரு துறையின்‌ செயல்பாடுகள் மற்றும் அதில் வழங்கப்படும் மானியங்கள், சலுகைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

    விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

    கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் நூல் விலை உயர்ந்து வருவதை கண்டித்து விசைத்தறி தொழிலாளர்கள், ஜவுளி தொழிலாளர்கள் நூல் விலையை கட்டுப்படுத்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 7-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக
    கூட்டரங்கில், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளான கர்ப்பிணிகளின் விவரங்களை பதிவு செய்தல், மாதாந்திர பரிசோதனை, மகப்பேறு சிகிச்சை அளித்தல், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி, பிறப்பு சான்றிதழ் வழங்குதல், குடும்ப நலம், கொரோனா தடுப்பூசி பணிகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி உள்ளிட்ட சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி